கோவையில் குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டு 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி படிப்பை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் உழைக்கும் சிறார்களை மீட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்களில் இரண்டு ஆண்டுகள் கல்வி அளிப்பதோடு, முறைசார்ந்த பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிப்பதற்கு தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
10-ம் வகுப்பு முடித்தவர்கள் தொழிற்கல்வி, பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து கல்வி பயில தமிழக அரசின் மூலம் கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதேபோல, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி, பொறியியல் படிப்பதற்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படுகிறது.
கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் மீட்கப்பட்ட 13 குழந்தைத் தொழிலாளர்கள் கடந்த கல்வியாண்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தேர்வு எழுதினர்.
இதில், மூன்று மாணவிகள் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்காக கல்லூரிகளில் சேர தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 13 மாணவர்கள் அடுத்த கல்லூரி படிப்பை மேற்கொள்ள தேவையான உதவிகள், சூழல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் கோவை மாவட்ட இயக்குநர் விஜயகுமார் தலைமையில், தேர்ச்சிபெற்ற 13 மாணவர்களின் பெற்றோர்கள், தனியார் கல்லூரி சார்பில் பிரதிநிதிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுக்கலாம், எந்த கல்லூரி சிறப்பானது, எவ்வளவு செலவாகும், அதனை செலுத்தக்கூடிய பொருளாதார சூழல் உள்ளது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் என்ன மாதிரியான உதவிகள் செய்ய முடியும் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



