திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் பொங்கலூர், அவிநாசிபாளையம் மற்றும் காட்டூர் பகுதிகளில், பெருந்தொழுவு தொங்குட்டிபாளையம் வேளாண்மைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் பாசனநீர் பயன்பாட்டின் அளவினை குறைத்து மகசூலை பெருக்கும் வகையில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் நேற்று முன்தினம் (ஜூலை 20) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்திற்கு நடப்பாண்டில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிர்களில் 2800 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைத்திட ரூ.16 கோடியே 38 இலட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் சொட்டு நீர் பாசனம் தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
மக்காச்சோளம் கரும்பு தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும் நிலக்கடலை மற்றும் பயறுவகைகளுக்கு தெளிப்பு நீர் பாசனக் கருவிகளும் நிறுவலாம். 5 ஏக்கர் பரப்பிற்குள் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் 12.50 ஏக்கர் வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீர் பாசன முறையினால் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம்.
சொட்டு நீர் பாசன முறையில் பயிருக்கு தேவையான நீர் மற்றும் உரம் வேர் பகுதிகளுக்கு வழங்கப்படுவதால் நீர் விரயமாவது குறைந்து தேவையற்ற களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.
நீர் பாய்ச்சுவதற்கான செலவு மற்றும் உரச் செலவு பெருமளவில் குறைகிறது. மண் இறுக்கம் குறைந்து பயிர்கள் நன்கு செழித்து வளர்வதனால் அதிக மகசூல் கிடைக்கும்.
இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள் (பிர்க்கா) குறுவட்டத்தில் குழாய் கிணறு மற்றும் துளை கிணறு அமைத்திட 50 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ.25,000 மானியம் வழங்கப்படுகிறது.
மின் மோட்டார் மற்றும் டீசல் பம்புசெட் நிறுவிட அதன் விலையில் 50 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது.
பைப் லைன் அமைக்க ஒரு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.10,000 மானியமும் அதிக பட்சமாக 2 எக்டருக்கும் தரை நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க அதிக பட்சம் ரூ.40,000 மானியமும் வழங்கப்படுகிறது.
சொட்டு நீர் பாசன கருவிகளுக்கான பைப் லைன் அமைத்திட கால்வாய் தோண்டுவதற்கு எக்டருக்கு ரூ.3,000 மானியம் வீதம் அதிகபட்சமாக 2 எக்டருக்கு ரூ.6,000 மானியமாக வழங்கப்படுகிறது.
இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.இத்திட் டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சிறு, குறு விவசாயிகள் சான்று, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாய தொழில் நுட்பங்களை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை கள அலுவலர்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கொண்டு செல்லும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் முக்கியத்துவம் குறித்தும், பயன் குறித்தும், விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் காய்கறி பயிர்களின் உற்பத்தியினை பெருக்க ரூ.60,000 மானியத்தில் அமைக்கப்பட்ட காய்கறி பந்தல் மற்றும் நுண்ணீர் பாசன திட்டங்களையும் வேளாண்மை பொறியியல் துறையால் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.8,00,000 மானியத்தில் தொங்குட்டிபாளையம் கிராமத்தில் நிறுவப்பட்ட வாடகை இயந்திர மையத்தினையும், ரூ.1,00,000 மானியத்தில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டை நீர்தேக்க பயன்பா ட்டினையும், பெருந்தொழுவு ஊராட்சியில் விவசாயி களுக்கு கூட்டுப் பண்¬ ணய திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் மானியமாக 5 களை எடுப்பான் கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், பொங்கலூர் வட்டார வேளாண்மை அலுவலர், தோட்டக் கலைத்துறை அலுவலர்கள்,விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



