fbpx
Homeபிற செய்திகள்7820 மாணவர்களுக்கு விடிவெள்ளியாய் ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ - தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

7820 மாணவர்களுக்கு விடிவெள்ளியாய் ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ – தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி!

நேரடிக் கல்வி தரும் பயனை ஆன்லைன் வகுப்புகளால் தரமுடியாது என்பதை கருத்தில் கொண்டு ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 10,615 பேர் ‘இல்லம் தேடிக் கல்வி’த் திட்ட தன்னார்வலர்களாக செயல்பட பதிவு செய்துள்ளனர்.

ஆரம்பப்பள்ளி அளவில் 5135 மாணவர்களும், உயர் தொடக்க நிலை அளவில் 2685 மாணவர்களும் என 7820 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

‘கேடில் விழுச்செல்வம் கல்வியொருவருக்கு
மாடல்ல மற்றை யவை’

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது கல்விச் செல்வமே, மற்றைய பொன், பொருள், மண் எனும் செல்வங்கள் ஒருவனுக்கு சிறந்த செல்வம் ஆகாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை 27.10.2021 அன்று விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார்.

கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று சொன்னாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான்.

வீட்டுக்குள் முடக்கியது
பள்ளிக்கு வந்து கல்வி கற்று வந்த அவர்களை வீட்டுக்குள் முடக்கி விட்டது கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம். பள்ளிக்கூடம் என்ற பரந்த வெளியைப் பயன்படுத்த முடியாமல் வீட்டுக்குள் இருந்ததே குழந்தைகளின் மனதைப் பாதித்துவிட்டது.

இந்தப் பாதிப்பை சரிசெய்யக்கூடிய வகையில், பள்ளிக்கு வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, மேலும் கூடுதல் நேரத்தை பள்ளி நேரம் போலவே படிப்பில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம்.

மாணவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே- இதற்காக தனியாக இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

நாள்தோறும், ஒவ்வொரு நாளும் மாலையில் ஒரு மணி நேரமோ – இரண்டு மணி நேரமோ வசதிக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வந்து மாணவர்களை படிக்க வைப்பார்கள்.

மாணவர்கள் வீட்டிற்கு அருகிலேயே இதற்காக தனியாக இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. நாள்தோறும் மாலையில் ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில் – தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியோடு ஆசிரியர்களின் கடமை முடிந்துவிட்டது என்று கருதாமல் வீட்டுக்கும் வந்து மாணவர்களுக்கு கற்றுத் தரக்கூடிய கடமையின் தொடர்ச்சிதான் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டமாகும். எப்போதுமே ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால்தான் புதிய பாதை அதன் மூலமாகத் திறக்கும்.

அப்படி கொரோனா என்ற நெருக்கடியில் உதயமானதுதான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டமாகும். முதல்வர், கொரோனா என்ற பெருந்தொற்று குறைந்ததன் காரணமாக பல்வேறு தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதில் முதலாவது, கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் துவக்கப்பட்டன.

அடுத்ததாக கடந்த நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை திறக்கப்பட்டு, மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த ஊரடங்குக் காலத்தில் பள்ளிக்கு வந்து பயிலக்கூடிய சூழல் இல்லாவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஆனால், நேரடிக் கல்வி தரும் பயனை ஆன்லைன் வகுப்புகளால் தரமுடியாது என்பதை கருத்தில் கொண்டு ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

ள்ளிகளுக்கு வெளியேயும்
கொரோனாவால் இழந்த காலத்தை ஈடுகட்ட அதிகப்படியான முயற்சிகளை மாணவர்கள் செய்தாக வேண்டும். பள்ளி நேரத்தில் மட்டுமே மாணவர்களைப் பழைய நிலைக்கு மடைமாற்றம் செய்துவிட முடியாது.

அதனால்தான் பள்ளி நேரம் முடிந்த பிறகும் சில மணி நேரங்கள் மாணவர்களுக்குப் பயிற்சிகள் தரும் வகையில், இதனை ஆசிரியர்களோடு சேர்ந்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் செய ல்பட முன்வந்துள்ளனர்.

தனித்துவம் கொண்ட இந்தத் திட்டம், வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சியாகும்.

இத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளது. படித்த இளைஞர்கள் தங்களது ஓய்வு நேரத்தை இதில் பங்கெடுப்பதன் மூலமாக பயனுள்ளதாக மாற்றலாம்.

விரைவில் மாற்ற முடியும்
உயர்கல்வித் துறையாக இருந்தாலும் – பள்ளிக்கல்வித் துறையாக இருந்தாலும், அனைவருக்கும் கல்வியை – உன்னதமான கல்வியை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பார்போற்றும் பள்ளிக்கல்வித் துறையின் இந்தத் திட்டத்தின் வழியாக தமிழகத்தை, கல்வியில் சிறந்த தமிழகமாக விரைவில் மாற்ற முடியும். பள்ளிக்கும் இல்லத்துக்குமான இடைவெளி குறையும்.

இல்லங்களும் பள்ளிகள் ஆகும்.
பள்ளிகளையும் இல்லங்களாக நினைத்து மாணவச் செல்வங்கள் பயனுற வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டத்தினை, ஈரோடு மாவட்டத்தில் கடந்த 01.12.2021 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியம், கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்களாக செயல்பட உள்ளவர்கள் இணைய பக்கத்தில், தங்களை பதிவு செய்து கொண்டு, இத்திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 10,615 பேர் ‘இல்லம் தேடிக் கல்வி’த் திட்ட தன்னார்வலர்களாக செயல்பட பதிவு செய்துள்ளனர்.

738 பேர் தேர்வு
முதற்கட்டமாக 1250 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் திறனறித் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் 738 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தன்னார்வலர்களுக்கு குழந்தைகளுக்கு கற்பித்தல் கற்றல் பொருட்களை பயன்படுத்துதல் சார்ந்து தீவிரமான மற்றும் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டு ஆரம்பப்பள்ளி அளவில் 341 மையங்களும், உயர் தொடக்க நிலை அளவில் 194 மையங்களும் என 535 மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஆரம்பப்பள்ளி அளவில் 5135 மாணவர்களும், உயர் தொடக்க நிலை அளவில் 2685 மாணவர்களும் என 7820 மாணவர்களும் பயின்று வருகின்றனர். மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

‘சிறப்பு ஆசிரியர்களால் தெளிவடைந்தேன்’
‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ மூலம் பயனடைந்து வரும் ஈரோடு ஊராட்சி ஒன்றியம், கூரபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் சிவகௌசிகன் (வயது 14) என்பவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

நான் கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறேன். எனது பெற்றோர் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால், வீட்டில் இருந்தபடியே கல்வி கற்று வந்தேன்.

என்னதான் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றாலும், பாடங்களில் உள்ள சந்தேகங்களை முழுமையாக தெரிந்து கொள்ள இயலவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தொடங்கி வைத்துள்ளார்.

சிறப்பு ஆசிரியர்கள் மூலம், எங்கள் பகுதியில் மாலை நேரங்களில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை சிறப்பு ஆசிரியர் மூலம் தெளிவுபடுத்தி வருகிறேன்.

பள்ளியை தவிர வீட்டிலும் மாணவர்களின் நேரங்கள் சிறப்பானதாக அமைய ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘எதிர்கால வாழ்வுக்கு
நல்ல அடித்தளம்’
‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ மூலம் பயனடைந்து வரும், ஈரோடு ஊராட்சி ஒன்றியம், கூரபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் தினேஷ்குமார் மாணவன் கௌதமன் ஆகியோரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

எனது பெயர் வளர்மதி (வயது 40). கணவர் பெயர் சாமியப்பன். கணவர் டீ கடை வைத்து வருமானம் ஈட்டி வருகிறார். 2 மகன்கள் உள்ளனர். பெரிய பையன் 8-ம் வகுப்பும், சிறிய பையன் 5-ம் வகுப்பும் பயின்று வருகிறார்கள்.

பெரிய பையன் மாற்றுத்திறனாளி ஆவார். கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்து, தற்போது திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சுழற்சி முறையில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனவே, எனது குழந்தைகள் வாரத்தில் 3 நாட்கள் வீட்டில் இருந்தபடியே பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள் தடையின்றி கல்வி பயிலவும், அவர்கள் பள்ளி நேரத்தை தவிர வீட்டில் உள்ள நேரம் பயனுள்ளதாக அமையும் வகையிலும், முதல்வர் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலேயே பாதுகாப்புடன் தங்களது வீட்டின் அருகிலேயே பாடங்களை கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்விற்கு அடித்தளமிட்டு வரும் முதல்வருக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

சந்தேகத்தை
விளக்கத் தெரியாது’
‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ மூலம் பயனடைந்து வரும், ஈரோடு ஊராட்சி ஒன்றியம், கூரபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த, மாணவன் மனோஜ் குமார், மாணவி ஜெயபிரியா ஆகியோரின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:

எனது பெயர் அங்கம்மாள் (வயது 34). கணவர் பெயர் வடிவேல். நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறோம். கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மகன் 7-ம் வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பள்ளியில் எங்கள் குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. இக்காலத்தில் எங்கள் குழந்தைகள் கல்வி தொலைக்காட்சியில் மூலம் தான் பாடம் பயின்று வந்தனர். நாங்களும் அதிகம் படிக்காதவர்கள்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் எங்கள் வீட்டு பாடங்களில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் எங்களுக்கு விளக்கம் அளிக்க தெரியாது. தற்போது முதல்வர், எங்கள் குழந்தைகள் பள்ளி நேரத்தை தவிர, வீட்டில் உள்ள நேரம் பயனுள்ளதாக அமையும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற சிறப்பான திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் பூமணி என்ற தன்னார்வலர் எங்களது வீட்டிற்கு அருகிலேயே மாலை நேரங்களில் ஒன்று முதல் ஒன்றரை மணிநேரம் பாடம் எடுத்து வருகிறார்.

இந்த வகுப்பு கற்பித்தல் தவிர, செயல்முறை விளக்கம் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. எங்கள் வீட்டின் அருகில் சுமார் 20 குழந்தைகள் பயின்றுவருகின்றனர்.

இதனால் எங்கள் குழந்தைகளும் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். எங்களைப்போன்ற ஏழை, ஏளிய பெற்றோரின் குழந்தைகளும் தடையில்லா கல்வி பயின்று வர ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

தொகுப்பு
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சு.பாலாஜி,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
செ.கலைமாமணி,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்)
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img