Homeபிற செய்திகள்462 இளைஞர்கள், தொழில்முனைவோருக்கு இதுவரை ரூ.18.30 கோடி மானியம் வழங்கல்- சேலம் மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு...

462 இளைஞர்கள், தொழில்முனைவோருக்கு இதுவரை ரூ.18.30 கோடி மானியம் வழங்கல்- சேலம் மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு மனதார நன்றி

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு 462 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தொழில்புரிய இதுவரை ரூ.18.30 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

“இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்”
தானே தொழில் செய்து உணவு உண்ணும் இயல்புடையோர் என்றென்றும் சிறப்புடையராவர் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைய தலைமுறையினரின் பொருளாதார மேம்பாட்டை கருத்திற் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

என்னென்ன திட்டங்கள்
குறிப்பாக, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மானியத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்ததாவது:

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்தால் பல்வேறு திட்டங்களுக்கு 462 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தொழில்புரிய இதுவரை ரூ.18.30 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் தொழில் முனைவோராக பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுயதொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெருந்தொழில் நிறுவனங்களுடன் அவர்களுக்கு தேவையான வணிகத் தொடர்பும் அமைத்து தரப்படுகிறது.

மானியத்துடன் கடன்
இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் ரூ.75 இலட்சத்திற்கும் மிகாமல் 25 விழுக்காடு முதலீட்டு மானியமும், 3 விழுக்காடு வட்டி தள்ளுபடி மானியத்துடன் கூடிய கடனும் வழங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் 2021-2022-ம் நிதியாண்டில் மட்டும் சேலம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.3.20 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 66 நபர்களுக்கு ரூ.3.81 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) திட்ட முதலீடானது உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமான ரூ.15 இலட்சத்திற்குள்ளும், சேவை தொழில் மற்றும் வியாபாரத் தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.5 இலட்சம் வரையிலும், மேலும் இவை அனைத்திற்கும் 25 விழுக்காடு மானிய வீதம் அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.2.50 இலட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு 2021-2022-ம் நிதியாண்டில் சேலம் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.1.52 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 113 நபர்களுக்கு ரூ.1.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) திட்ட முதலீடானது உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமான ரூ.25 இலட்சத்திற்குள்ளும் (கல்வி தகுதி 8-ம் வகுப்பிற்கு கீழ் ரூ.10 இலட்சம் வரையிலும்), சேவை தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள்ளும் (கல்வி தகுதி 8-ம் வகுப்பிற்கு கீழ் ரூ.5 இலட்சம் வரையிலும்) மேலும் இவை அனைத்திற்கும் திட்ட மதிப்பீட்டில் கிராமப்புறத்திற்கு 35 விழுக்காடு மானியமும், நகர்ப்புறத்திற்கு 25 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு 2021-2022-ம் நிதியாண்டில் சேலம் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.2.50 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 182 தொழில் முனைவோர்களுக்கு ரூ.7.74 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் வளர்ச்சிக்காக
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு மானியத் திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை 2021 இன் கீழ் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 70 நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ. 497.10 இலட்சமும், 16 நிறுவனங்களுக்கு மின்மானியமாக ரூ.8.20 இலட்சமும், 4 நிறுவனங்களுக்கு ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு மானியமாக ரூ.1.60 இலட்சமும், 5 நிறுவனங்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெற மானியமாக ரூ.1.30 இலட்சமும் மற்றும் 6 நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கல் மற்றும் பிணையமில்லா கடன் வாங்கும் நிறுவனங்களுக்கான பின் முனை வட்டி மானியமாக ரூ.1.40 இலட்சமும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மானியங்களை பெற www.msmeonline.tn.gov.in http://www.msmeonline.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார்.

“எண்ணிய கனவு நனவானது”
தமிழக அரசின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 சக்கர வாகன பழுதுபார்க்கும் நிலையம் அமைத்துள்ள எம்.சந்தோஷ் சிவன் தெரிவித்ததாவது:

நான் பள்ளப்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன். எனது தந்தை தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். நான் டிப்ளமோ ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்து முடித்த பின்னர் ஒரு தனியார் வாகன பழுது பார்க்கும் நிறுவனத்தில் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தேன்.

எனக்கு கிடைத்த மாத சம்பளம் எனது அன்றாட அத்தியாவசிய தேவையை மட்டுமே பூர்த்தி செய்வதாக இருந்தது. எனது எதிர்காலத்தை நினைத்து எனது பெற்றோர் மிகவும் வருத்தப்பட்டனர்.

வாகனங்கள் குறித்தும், வாகனங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்வது குறித்தும் முழுமையாக எனக்கு தெரியும் என்பதால் புதிதாக நான் வசிக்கும் பகுதியின் அருகில் அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய 4 சக்கர வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை அமைத்து எனது வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்று பல நாட்களாக எண்ணி வந்தேன்.

அதே சமயம் என்னை படிக்க வைக்கவே மிகவும் சிரமப்பட்ட தந்தைக்கு மேலும் பொருளாதார நெருக்கடி கொடுக்க எண்ணமில்லை.

சுயதொழில் தொடங்க போதிய மூலதன நிதி இல்லாததால் தொழில் தொடங்க இயலாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் எனது உறவினர் மூலம் தமிழக அரசின் சார்பில் மாவட்ட தொழில் மையத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து அறிந்தேன்.

உடனடியாக சேலம் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பித்தேன். எனக்கு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கனரா வங்கி, பஜார் கிளையின் உதவியுடன் ரூ.2.47 இலட்சம் கடனுதவி கிடைத்தது. இதில் அரசின் மானியமாக ரூ.61,790 வழங்கப்பட்டது.

இதன்மூலம் எனது கனவை நனவாக்கும் வகையில் 4 சக்கர வாகன பழுதுபார்க்கும் நிலையத்தினை அமைத்தேன். இரவு பகல் பார்க்காமல் இணைந்து உழைத்து தற்போது மாதம் சுமார் ரூ.20,000 வருவாயை பெற்று வருகிறேன். கடன் வழங்கிய வங்கிக்கு மாதத் தவணையாக ரூ.4,800-ஐ செலுத்தி வருகிறேன்.

இதன் மூலம் வாழ்வில் நான் எண்ணிய கனவை நனவாக்கி நல்ல முறையில் மனநிம்மதியுடன் வாழ்ந்து வருகிறேன். தமிழக அரசின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை எங்களைப் போன்ற தொழில்முனைவோருக்கு வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

“நிகர லாபம் மாதத்துக்கு ரூ.30 ஆயிரம்”
தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற்று, வீடு கட்டும் கற்கள்(Interlock Bricks) தயாரிக்கும் நிறுவனம் நடத்தி பயனடைந்து வரும் எஸ்.ஜி.திவ்யா தொரிவித்ததாவது:

சேலம், கோரிமேடு பகுதியில் வசித்து வருகிறேன். முதுநிலை கட்டடப் பொறியாளர் பட்டம் பெற்றுள்ளேன். எனது கணவரும் கட்டடப் பொறியாளர் பட்டம் பெற்று ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். எங்களது வருமானம் குடும்பச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லை.

எனது கணவரின் தொழில் அனுபவத்தை வைத்து சுயமாக கட்டடப் பணி தொடர்பான தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவர் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தது. ஆனால் அதற்கு போதிய அளவில் முதலீடுகள் இல்லாமல் பல ஆண்டுகளாக என்ன செய்வதென்று சிந்தித்து வந்தோம்.

அந்த சமயத்தில் செய்தித்தாள்களின் வாயிலாக ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி வழங்குவது தொடர்பான செய்தி வெளியானது.

இச்செய்தியை அறிந்த பின் சேலம், குரங்குசாவடியில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தில் மாவட்ட பொது மேலாளரை அணுகி எனது அனுபவம் குறித்த சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களை வழங்கி விண்ணப்பித்தேன்.

விண்ணப்பத்தினை பரிசீலித்து புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 5 ரோடு கிளையின் உதவியுடன் ஒரு மாத காலத்திற்குள் ரூ.2.62 இலட்சம் மானியம் உட்பட ரூ.10.50 இலட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி கிடைத்தது. கடனுதவியுடன் வீடு கட்டும் கற்கள் தயாரித்தல் தொழில் 6 மாதத்திற்கு முன்னர் தொடங்கினோம்.

தொழில் தொடங்கி சில மாதங்களில் ரூ.15,000-த்தினை கடனுதவி அளித்த வங்கிக்கு திருப்பி செலுத்தியது போக நிகர லாபமாக ரூ.30,000 வருவாய் கிடைக்கிறது.

வரும் நாட்களில் வருவாய் அதிகாரிக்கும் என நம்புகிறோம்.
தொழில் தொடங்க போதிய அளவில் முதலீடுகள் இல்லாமல் தவித்து வந்த எங்களுக்கு தமிழக அரசின் மூலம் நிதியுதவி கிடைத்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களது கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை எங்களைப் போன்ற தொழில்முனைவோர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பிற்கிணங்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளே வெற்றிகரமாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருவாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img