வன நிலத்தில் 75 வருடங்களாக தனது சொந்த அனுபவத்தில் பயன்படுத்தி வந்த 268 பழங்குடியின மக்களுக்கு 130.268 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்களும், வனங்களில் விளையும் மகசூல்களான கிழங்கு, புளி, கடுக்காய் போன்றவற்றை சேகரிப்பதற்கு 49 வன குழுக்களை சேர்ந்த 4149 பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 75.222 ஹெக்டேர் பரப்பளவு சமுதாய உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இருளர் இன மக்களுக்கு இருக்க இருப்பிடம், சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
25 மாவட்டங்களில்
தமிழ்நாட்டில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வரும் தருமபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கடலூர், மதுரை, அரியலூர், திருநெல்வேலி, தென்காசி, சென்னை ஆகிய 23 மாவட்டங்களில் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலையில், பழங்குடியின மக்களை அதிகம் பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள், குறைவான அடிப்படை வசதிகளுடன் வாழும் நிலை, வன வளங்கள் அழிக்கப்படுவதால் மக்கள் இடம் பெயர்தல், பொருளாதார வாய்ப்புகள் இல்லாமை மற்றும் குறைந்த கல்வி அறிவு போன்ற இன்னல்களை களைவதற்கு அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அரசின் குறிக்கோள்
பழங்குடியின மக்களை கல்வி, சுற்றுப்புறத் தூய்மை ஆகியவற்றில் மேம்பாடு அடையச் செய்வதும், சுகாதாரம், அவர்களது குடியிருப்புகளுக்கு முழுமையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்புச் சாலைகள், மின்சார வசதி மற்றும் வீடுகள் கட்டித்தருதல் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வளர்ச்சி அடையச் செய்வதும் தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாகும்.
தருமபுரி மாவட்டத்தில் இருளர் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மானியத்துடன் வீடுகள்
அதன்படி, இதுவரையில் இருளர் இன மக்களின் அத்தியாவசிய தேவையான இருப்பிட வசதிக்காக 149 இலவச வீட்டுமனை பட்டாக்களும், 67 பழங்குடியின இருளர் இன மக்களுக்கு ரூ.191 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
745 பழங்குடியினருக்கு (இருளர்) சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பழங்குடியினர் இருளர் இன மக்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கும், வாழ்க்கை தர உயர்விற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 110 பழங்குடியின இருளர் இன மக்களுக்கு ரூ.38.50 இலட்சம் மதிப்பீட்டில் 110 இலவச கறவை மாடுகளும், 5 பழங்குடியின விவசாயிகளுக்கு நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் 5 பவர் டில்லர்களும், 10 பழங்குடியினர்களுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி வலைகளும், ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு தலா 12 செம்மறி ஆடுகள் வீதம் 17 பயனாளிகளுக்கு 204 செம்மறி ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பிடம் அருகே மருத்துவ சேவை
பழங்குடியின மக்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவை கிடைப்பதற்காக மலைப்பகுதிகளில் அவர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே உள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு, இம்மக்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைத்திட பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 3 பள்ளிகள் மற்றும் விடுதிகள் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மண் புழு உரம் தயாரிப்புப் பணி
பழங்குடியின இருளர் இன பெண்களில் 20 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளும், 40 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் காகிதம் மற்றும் துணிப்பைகள் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதே திட்டத்தின் கீழ் 50 படித்த வேலைவாய்ப்பற்ற பழங்குடியினரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத் தப்படும் போட்டித்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
‘இலவச நிலத்தால்
வாழ்க்கையே மாறியது’
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நம்மாண்ட அள்ளி அஞ்சல், கும்மனூர் ஊராட்சி, எல்லப்பன் பாறை மலைக்கிராமத்தில் வசித்து வரும் இருளர் இனத்தை சேர்ந்த வெங்டேஷ் மனைவி, இலவச வீட்டுமனை பட்டா பெற்று, பயன் பெற்ற, மாதேவி தெரிவித்ததாவது:
எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சமூகத்தில் பின்தங்கிய இருளர் இனத்தை சேர்ந்த எங்களை போன்ற ஏழை இருளர் இன மக்களை காக்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கடந்த 2007-ம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ், எங்கள் இருளர் இன மக்கள் 27 பேருக்கு எங்கள் பகுதியிலேயே இலவச நிலம் வழங்கினார்கள். அதில் என் கணவருக்கும் இலவச நிலம் கிடைத்தது.
இதன் மூலம் எங்களின் வாழ்க்கையே மாறி விட்டது. மலைப்பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு எதுவுமே நிரந்தரமாக கிடைத்ததில்லை. ஆனால் ஏதும் இல்லாத எங்களுக்கு இலவச நிலம் கொடுத்து, அந்நிலத்திற்கு சொந்தகாரர்களாக்கிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரை என்றென்றும் எங்களின் தெய்வமாக கொண்டாடி வருகிறோம்.
அவர் வழங்கிய நிலத்தில் நாங்கள் சாகுபடி செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகிறோம். இந்நிலையில், நாங்கள் குடியிருப்பதற்கு தனியாக வீட்டுமனை இதுவரை இல்லாமல் இருந்தது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரைப் போலவே எங்களை போன்ற பின்தங்கிய ஏழை, எளிய இருளர் மக்கள் மீது பாசம் கொண்ட மு.க.ஸ்டாலின் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிட ஆணையிட்டார்.
கடந்த 04.04.2022 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் இருளர் இன மக்களாகிய எனக்கும், என்னோடு சேர்த்து எங்கள் இருளர் இனத்தை சேர்ந்த 22 பெண்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்கள்.
எங்களது வறுமை நீங்க, வாழ்வாதாரம் பெருக, இலவச நிலம் வழங்கிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரைப் போலவே மனை அற்ற இருளர் இன மக்களான எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய முதல்வருக்கு எனது சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் இருளர் இன மக்களின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘கறவை மாடு வந்தது வறுமை நீங்கி ஒளி பிறந்தது’
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் குடியிருந்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த சி.பார்வதி, முதலமைச்சரிடம் நேரில் இலவச கறவை மாடு பெற்றது குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது.
நாங்கள் மூன்று தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம்.
எனது கணவர் பெயர் சின்னையன். நாங்கள் விவசாயக் கூலி வேலை செய்து, மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்தோம். அந்த விவசாயக் கூலி வேலை கூட சில சமயங்களில் கிடைக்காமல் எனது குடும்பம் மிக வும் வறுமை நிலையில் இருந்தது, கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 30.09.2021 அன்று எங்கள் மலைக்கிராமமான வத்தல்மலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகைதந்து, எங்கள் மலைவாழ் மக்களின் குறை களையும், கோரிக்கைகளையும் கேட் டறிந்து, அதை நிறைவேற்றி தந்தார்.
அன்றைய தினம் ஏழை பழங்குடியினத்தை சேர்ந்த பெண்ணான எனக்கு ரூ.35000/- மதிப்பிலான கறவை மாட்டினை இலவசமாக வழங்கி, எங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க ஒளியேற்றி வைத்தார்.
முதல்வரின் திருக்கரங்களால் இலவச கறவை மாடு பெற்றது எனது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
இக்கறவை மாட்டினை கொண்டு தினமும் பால் கறந்து, அரசு பால் சொசைட்டிக்கு ஊற்றி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்ப வாழ்வாதாரத்தை நல்ல முறையில் மேம்படுத்தி வருகின்றேன்.
பழங்குடியின மக்களாகிய எங்கள் மலைகிராமத்திற்கே நேரில் வருகை தந்து, எங்கள் குறைகளை கேட்டறிந்து, பல்வேறு திட்டங்களை அறிவித்து எங்கள் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளதோடு, எனக்கு கறவை மாட்டினை முதல்வர் திருக்கரங்களால் வழங்கி, எனது வாழ்வதாரம் மேம்படவும், வாழ்க்கைத் தரம் உயரவும் வருவாய் ஈட்டும் வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார்.
ஏழை பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த எனக்கும் என்னை போன்ற ஏழைப்பெண்களுக்கும், இலவச கறவை மாடுகளை வழங்கி, எங்கள் குடும்ப வறுமை நீங்கிட, நாங்கள் சுயமாக வருவாய் ஈட்டி எங்கள் குடும்பத்தை பாதுகாத்திடும் வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள முதல்வருக்கு எனது சார்பாகவும், எனது பழங்குடியின மக்களின் சார்பாகவும் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
‘யாராலும் பார்க்கப்படாதவர்கள்
எல்லோராலும் பார்க்கப்படுகிறோம்’
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மாம்பட்டி அஞ்சல், கைலாபுரம் மலைக்கிராமத்தில் வசித்து வரும் இருளர் இனத்தை சேர்ந்த மு.சேட்டு என்பவர், மானியத்துடன் கூடிய பவர் டில்லர் பெற்று பயன்பெற்றது குறித்து தெரிவித்ததாவது.
என் தகப்பனார் பெயர் முருகன். எனக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர். சமூகத்தில் பின்தங்கிய இருளர் இனத்தை சேர்ந்த நான் அவ்வப்போது விவசாய கூலி வேலையினையும், எங்களது 2 ஏக்கர் நிலத்தில் எங்களிடமிருந்த மாடுகளை வைத்து உழவு பணிகளையும், விவசாய வேலையினையும் செய்து வந்தேன்.
மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். விவசாயம் செய்வதற்கு போதிய ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையாலும், நவீன இயந்திரங்கள் இல்லாத காரணத்தாலும், விவசாயம் சரிவர செய்ய முடியாததால் எங்களது குடும்பத்திற்கு விவசாயத்தின் மூலம் போதிய வருமானம் கிடைக்கவில்லை.
இதனால் எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலைக்கு சென்று விட்டது. வறுமை நிலையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் வாடகைக்கு டிராக்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி உழவு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.
சமூகத்தில் பின்தங்கிய இருளர் இன மக்களாகிய எங்களுக்கு எப்போது நல்ல வழி கிடைக்கும், எங்களது வாழ்க்கைத்தரமும், வாழ்வாதாரமும் உயரும் என்று ஏங்கி கொண்டிருந்தோம்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இதனால் இதுவரையில் யாராலும் பார்க்கப்படாத நாங்கள் இப்போது எல்லோராலும் பார்க்கப்படுகின்ற, பாராட்டப்படுகின்ற நிலையினை அடைந்திருக்கிறோம்.
எங்களைப் போன்ற சமூகத்தில் பின்தங்கிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களில் ஒன்றான மானியத்துடன் கூடிய பவர்டில்லர் வழங்கும் திட்டத்தின் கீழ், நவீன விவசாயத்தினை மேற்கொள்ள வசதியாக பவர் டில்லர் வேண்டி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்தேன்.
இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, இருளர் இனத்தை சேர்ந்த எனக்கும், என் சமூகத்தை சேர்ந்த 4 பேருக்கும் தலா ரூ.1,80,000/- மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய 5 நவீன பவர் டில்லர் கருவிகளை வழங்கினார். இப்பவர் டில்லரை பயன்படுத்தி எனது விவசாய நிலத்தில் நானே உழவு பணிகளை எளிதில் மேற்கொண்டு வருகிறேன்.
‘காலமும் மிச்சமும்
செலவும் குறைவு’
இதனால், எனக்கு கால நேரம் மிச்சமாகிறது. செலவும் குறைகிறது. மற்றவர்கள் நிலங்களுக்கும் வாடகைக்கு உழவு பணிகளை செய்து கொடுத்த வருகிறேன். இதன் மூலம் எனக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த வருமானத்தைக் கொண்டு விவசாயத்தையும் சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, எனது குடும்ப வாழ்வாதாரத்தை நல்ல முறையில் மேம்படுத்தி வருகின்றேன்.
பின்தங்கிய மக்களாகிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் பெரு கவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் எங்கள் மீது தனி அக்கறை கொண்டு, எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி, எங்கள் இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எனது சார்பாகவும், எங்கள் இருளர் இன மக்களின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, என் றென்றும் முதல்வருக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம் என்றார்.
தமிழகத்தில் பழங்குடியினர் மக்கள் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய மக்களாகிய இருளர் இன மக்களின் வாழ்வாதாரம் பெருகவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் பழங்குடியினர், இருளர் இன மக்கள் மீது தனி அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிற முதல்வர், தருமபுரி மாவட்ட பழங்குடியினர், இருளர் இன மக்கள் என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாக இருப் பார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
இருப்பிடத்திற்கு பட்டா
தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் 1,103 பயனாளிகளுக்கு இருப்பிடத்திற்கு பட்டா, குடியிருப்பதற்கு வீடுகள், வாழ்வாதார மேம்பாட்டிற்கு இலவச கறவை மாடுகள், இலவச ஆடுகள், பவர் டிரில்லர்கள், மீன்பிடி வலைகள், மகளிர் மற்றும் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள், பள்ளி விடுதிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய இருளர் பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 50 படித்த வேலைவாய்ப்பற்ற பழங்குடியினரின் குழந்தைகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் கேட்டரிங், ஓட்டுநர், தையல், மருத்துவம் சார்ந்த செவிலியர், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும், 3 பழங்குடியின மக்களுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் சூரிய சக்தியில் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்கும் பணிகளும், 50 பழங்குடியின மக்களுக்கு ரூ.2.33 இலட்சம் மதிப்பீட்டில் 50 இலவச தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 25 பழங்குடியினர்களுக்கு ரூ.1.50 இலட்சம் செலவில் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும், 50 உறுப்பினர்களை கொண்ட மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன. சட்டமன்றத்தில் முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தவாறு, தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 16 பழங்குடியின மக்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணிகளும், ரூ.7.18 இலட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகளும், ரூ.10.29 இலட்சம் மதிப்பீட்டில் சூரியஒளி விளக்குகள் அமைக்கும் பணிகளும் என மொத்தம் ரூ.65.45 இலட்சம் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.11.90 இலட்சம் மதிப்பீட்டில் பழங்குடியினர் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
வன உரிமைச்சட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்க்கை தர உயர்விற்கும், தனி நபர் உரிமம் மற்றும் சமுதாய உரிமம் வழங்கி, அவர்கள் வருவாய் ஈட்டி பயன்பெறும் வகையில் வன நிலத்தில் 75 வருடங்களாக தனது சொந்த அனுபவத்தில் பயன்படுத்தி வந்த 268 பழங்குடியினர் மக்களுக்கு 130.268 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்களும், வனங்களில் விளையும் மகசூல்களான கிழங்கு, புளி, கடுக்காய் போன்றவற்றை சேகரிப்பதற்கு 49 வன குழுக்களை சேர்ந்த 4149 பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் 75.222 ஹெக்டேர் பரப்பளவு சமுதாய உரிமமும் வழங்கப்பட்டுள்ளன. 76 பழங்குடியினர்களுக்கு 37.718 ஹெக்டேர் பரப்பளவு தனிநபர் பட்டாக்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொகுப்பு:
மு. அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.



