இளங்கலை பட்டப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு, வரும் 8-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலை. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: 14 உறுப்பு மற்றும் 28 இணைந்த கல்லூரிகள் மூலமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 11 இளங்கலை பட்டப் படிப்புகளை வழங்குகிறது .
நடப்பு கல்வி ஆண்டில் 2021-22, இப்படிப்புகளில் சேர, ஆன்லைன் வாயிலாக வரும் 8-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், அரசு வழிகாட்டுதலின் படி, இந்த ஆண்டு முதல் ஒரு புதிய முயற்சியாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்புகள் தமிழ் வழியிலும் வழங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளது.
டாக்டர் எம்.கல்யாண சுந்தரம், டீன் (விவசாயம்) மற்றும் சேர்க்கை குழுத்தலைவர் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் ஒரு தோட்டக் கலைக்கல்லூரி மற்றும் கரூர் மாவட்டம், நாகை மாவட்டத்தில் கீழ் வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று வேளாண் கல்லூரிகளை தொடங்க உள்ளதாகவும், நிதிநிலை அறிக்கையின் போது, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இக்கல்லூரிகள் இந்த கல்வியாண்டில் 2021-22-ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக கட்டமைப்பு கல்லூரிகளாக இயங்கும் என்றார்.



