நாட்டின், பொதுத் துறை வங்கிகளின் பங்கு களை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டுள்ளது, இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற் பட்டோர் பங்கேற்றுள்ளனர்,
இதனால், பொது மக்களின் தேவைகளான, செக் கிளியரன்ஸ், ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கி முன்பு 500க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் கூறியதாவது,
கடந்த பிப்ரவரி மாதம், பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் உட னடியாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.
ஊழியர்கள், அதிகாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களிடமிருந்து கையெழுத்துக்களை பெற்று பிரதமருக்கு அனுப்பி உள்ளோம்.
தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கும் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
அதனடிப்படையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஆகிய இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு பங்குகள் 26 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது, மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து 100 சதவிகித ஊழியர்கள் அதிகாரிகள் டிசம்பர் 16 மற்றும் 17, ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்பொழுது போராட்டம் நடைபெற்று வருகின்றதாக தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனாட்சி சுப்பிரமணியன், ராஜவேலு, சுந்தரவடிவேலு, சசிதரன், மகேஸ்வரன், தேவாசீர்வாதம், கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சைய்யது இப்ராகிம் மற்றும் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.



