உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மலை ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி நீராவி ரயில் என்ஜின் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் ஃபர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய ரயில்வே நிர்வாகத்தின் முயற்சியால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே நிலக்கரி என்ஜின் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் என்ஜின் தயாரிக்கும் பணிகள் கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வந்தன. இது சுமார் ரூ.9 கோடி மதிப்பில் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட நிலக்கரியால் இயங்கும் முதல் நீராவி மலை ரயில் என்ஜின் ஆகும்.
இந்தப் புதிய என்ஜின் கடந்த 3 நாள்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது. இதைய டுத்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஹில்கு ரோவ் ரயில் நிலையம் வரை 13கி.மீ. தொலைவுக்கு ரயில் என்ஜின் சோதனை ஒட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
நீலகிரி மலை ரயில் இணை இயக்குநர் சதீஷ் சரவணன் (நீலகிரி மலை ரயில் பாரம்பரியம்) மேற்பார்வையில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையின் தயாரிப்பு உதவிப்பணி மேலாளர் சுப்பிரமணியம், முதுநிலைப் பொறியாளர் கணேஷ் முன்னிலையில் ரயில் என்ஜினுடன் இரு பெட்டிகளை இணைத்து மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சோதனைக்குப் பின்னர் குன்னூரில் உள்ள மலை ரயில் பராமரிப்புக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை ஓட்டத்தில் கண்டறியப்பட்ட சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து, அடுத்த 20 நாள்களில் மக்கள் பயன்பாட்டிற்காக ரயில் என்ஜின் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.



