fbpx
Homeபிற செய்திகள்போலி நபர்களை விரட்டியடிப்போம்!

போலி நபர்களை விரட்டியடிப்போம்!

தமிழ்நாடு தேர்வுத்துறையின் அச்சிடப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து அஞ்சல் துறை, வங்கிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பணியில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போலி மதிப்பெண் சான்றிதழ்களில் முதன்மை மொழியாக இந்தி பெரும்பாலும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழில் கையொப்பமிட்ட அதிகாரியும் இந்தியில் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் அதிகாரியின் கையொப்பம் தமிழில் மட்டுமே இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் 500க்கும் மேலானோர் போலி தமிழ்நாடு மதிப்பெண் சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர் என்பதை ஆய்வின் மூலம் அரசு தேர்வுகள் துறை கண்டுபிடித்துள்ளது.

இதுவரை 2,500 மதிப்பெண் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் ஆயிரத்திற்கும் மேலானவை போலி என தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட நபர்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அஞ்சல் அலுவலகங்களில் சேர்ந்து பணிபுரிந்து வந்தது உறுதியானது.

அதில், பெரும்பாலான மதிப்பெண் சான்றிதழ்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

போலி தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழ்களை அளித்து நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணிகளில் சேரும் வட மாநிலத்தவர்களால் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் துறை வழியே, தபால் துறைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “தபால்துறை பணிக்கு தேர்வாகி, வட மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வழங்கியுள்ள, தமிழக 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்கள் போலியானவை.

அவை தமிழ்நாடு தேர்வுத்துறையால் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் முத்திரை, தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் பெயர் போன்றவற்றை தவறாக பயன்படுத்தி, போலி சான்றிதழ் அளித்தவர்கள்; அதை தயாரித்தவர்கள் மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைகளில் தமிழர்களை விட அதிகளவில் வடமாநிலத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் படித்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் இருவர் அல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர்.

இப்படி கும்பலாக மோசடி செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறைகேடுகள் கடந்த ஒரு வாரமாக தலைப்புச் செய்தியாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் அவர்கள் மீதான கைது நடவடிக்கையில் எந்த வேகமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், அத்தனை பேரும் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்க வேண்டாமா? சிறையில் அடைக்கப்பட்டு இருக்க வேண்டாமா-? இது ஏன் விரைவாக நடக்கவில்லை?

அவர்களுக்கு பணி அளித்த அரசுத்துறைகள் காலதாமதம் செய்யாமல் போலி பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசில் புகார் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தமிழ்நாட்டு கல்விச்சான்றிதழ்களுக்கென உயரிய மதிப்பு உள்ளது. இதனை கிள்ளுக்கீரையாக நினைத்த போலிகளின் முகத்திரை கிழித்தெறியப்பட வேண்டும்.
போலி நபர்களை விரட்டியடிப்போம்!

படிக்க வேண்டும்

spot_img