கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை பகுதியில் அமைந் துள்ள மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் பூக்களிலிருந்து வாசனை எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இது திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறாத காலகட்டங்களில், பூக்களின் விலை மிகவும் குறைவாக விற்கப்படும் காலங்களில், மிகவும் பயனுள்ள தொழில் நுட்பமாகும்.
ஏற்றுமதியாளர்களுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும் என்றார் மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், விசுவாசபுரத்தில் தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின்கீழ் செயல்பட்டு வரும், மலரியல் ஆராய்ச்சி நிலையத்தினை, ஆட்சியர் மா.அரவிந்த், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்திலேயே மலர் பயிர்களுக்கான ஆராய்ச்சிக்கென்று பிரத்யேகமாக தொடங்கப்பட்ட முதல் ஆராய்ச்சி நிலையம், தோவாளை, விசுவாசபுரத்தில் அமைந்துள்ள மலரியல் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.
இவ்வாராய்ச்சி நிலையம், தோவாளை மலர்ச்சந்தையில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் சுமார் 4.43 எக்டேர் நிலப்பரப்பில், தேசிய நெடுஞ்சாலை 47 பி- ல் அமைந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி, மலர் சாகுபடியாளர்களின் முன்னேற்றத்திற்காக அரசு தொடங்கியது.
இந்த நிலையத்தின் வாயிலாக மலர்ச்சந்தைகளில் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களால் விரும்பப்படும் மலர் வகைகள், அவற்றின் தரம், நிறம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி திட்டங்களை வகுத்து, அதன் முடிவுகளை விவசாயிகளுக்கு கொண்டு செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமாகிறது.
உயர் ரகங்கள்
இந்த ஆராய்ச்சி நிலையம் துவக்கப்பட்ட தன் அடிப்படை நோக்கம் மல்லிகை, சம்பங்கி, அரளி, வாசனை ரோஜா, கேந்தி, செவ்வந்தி, வாடாமல்லி, கோழிக் கொண்டை, கனகாம்பரம் போன்ற மலர் வகைகளில் உயர் மகசூல் இரகங்களை உருவாக்குதல், ஆர்கிட்ஸ், ஆந்தூரியம், டெலிக்கோனியா போன்ற மலர் வகைகளில் நீண்ட தண்டு மற்றும் அதிக வாழ்நாள், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சி, உதிரி மற்றும் கொய்மலர்களின் நவீன வேளாண் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், வாழை மற்றும் தென்னை தோப்புகளில் ஊடுபயிராக பயிரிட ஏற்ற மலர்பயிர்களை நிர்ணயிக்கும் ஆராய்ச்சி, மலர் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை.
உதிரி மற்றும் கொய் மலர்களில் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தயை தொழில்நுட்பங்களை உருவாக்குதல், மதிப்புக்கூட்டப்பட்ட மலர் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பங்களை கண்டறி தல் ஆகும்.
தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தில், தற்போதைய ஆராய்ச்சி திட்டங்களாக அதிக மகசூல் மற்றும் அதிக வாழ்நாள் தன்மை கொண்ட அரளி வகைகளை சேகரித்து, தொகுப்புகளாக வகைப்படுத்துதல், பட்டன் ரோஸ் மற்றும் காஷ்மீர் ரோஸ் போன்ற ரோஜா வகைகளில் உயர் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், வாழை மற்றும் தென்னையில் ஊடுபயிராக உயர்ரக மலர்களை விளைவிக்கும் வழிகளை கண்டறியும் ஆராய்ச்சி, டெலிகோனியாவில் வேளாண் உயர் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சாகுபடியில் இல்லாத புதிய மலர்களை சேகரித்து, பரிணாம கூறுகளை பராமரித்தல்.
மல்லிகை மற்றும் பிச்சி மலர்களில், பருவமில்லா காலங்களில் பூக்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சி, தாமரை மற்றும் அல்லி வகைகளை சேகரித்தல். ஆர்க்கிட் மலர் சாகுபடி உயர் தொழில் நுட்பங்கள், மின்னணு வேளாண்மை ஆகும்.
அரளி
இந்த ஆராய்ச்சி நிலையம் தொடங்கிய நாளில் இருந்து சாதனைகளாக அரளி செடியினை சாலை ஓரங்களிலும், சமவெளி பகுதிகளிலும் வணிக ரீதியாகவும், அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வருகிறது.
அரளி செடியானது வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடைய ஒரு பயிராகும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, சேலம், தேனி, மதுரை, திருநெல்வெலி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட வகைகள் நடவு செய்து மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சி முடிவின்படி இராசிபுரம் தேர்வு (NI-15) வருடம் முழுவதும் அதிக மகசூல் தரவல்லது என கண்டறியப்பட்டுள்ளது.
ரோஜா
ரோஜா உதிரிமலர் சாகுபடி தொழில் நுட்பத்தில் பயிர்பெருக்க முறைகள் பட்டன் ரோஜா மற்றும் கிளாடியேட்டர் இரகங்களில் குச்சி நடவு, பதியமிடுதல், மொட்டுக் கட்டுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
குச்சி நடவில் இளம் குச்சிகளும், சற்று முதிர்ந்த குச்சிகளும் பயன்படுத்தப்பட்டன. மொட்டுக் கட்டுவதில் ‘ ஜி’ வடிவ மொட்டுக்கட்டுதல், பேட்ஜ் மற்றும் கிளட்ச் முறைகளும் மேற்கொள்ளப்பட்டது.
வேர்ச்செடியாக பன்னீர்ரோஜா மற்றும் நாட்டுரோஜா இரகங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் சற்று முதிர்ந்த குச்சிகளை பயன்படுத்திய குச்சி நடவில், பட்டன்ரோஜா ரகம் 3.33 நாட்களில் அதிகபட்சமாக 80 சதவீதம், கிளாடியேட்டர் ரகம் 5 நாட்களில் அதிகபட்சமாக 62 சதவீதமும் துளிர் விட்டுள்ளது என கண்டறியப்பட்டது.
குண்டுமல்லி (Jasminum sambac)
மல்லிகையில் பொதுவாக மகசூல் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே பெறப்படுகிறது. மாற்றாக சுற்றுப்புறச் சூழல், கவாத்து செய்தல், உரமிடுதல், வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல் மூலமும் மகசூல் பெறலாம்.
குறிப்பாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அதிக மகசூல் கிடைக்கிறது. இந்த சமயங்களில் விலை கிலோவுக்கு ரூ.50/- முதல் 150/- வரை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பருவமில்லா காலங்களில் (ஜூலை முதல் டிசம்பர் வரை) மிகக் குறைந்த மகசூல் மற்றும் அதிக தேவை காரணமாக விலை கிலோவுக்கு ரூ.150/- முதல் ரூ.750/- வரை கிடைக்கிறது.
இந்த காலகட்டத்தில் தான் அனைத்து பண்டிகைகளும் (ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ், நவராத்திரி), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேவைகளும், வாசனைத்திரவிய தயாரிப்பு தேவையும் அதிகமாகிறது.
விவசாயிகளுக்கும் வேலை தேடுவோருக்கும் சிறந்த முறையில் பயிற்சியளிப்பதற்காக ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியில், இரட்டை சுத்திகரிப்பு கருவி போன்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றுடன் மிக முக்கியமாக பூக்களிலிருந்து வாசனை எண்ணெய் பிரித்தெடுக்கும் யூனிட் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது திருமணம் போன்ற விழாக்கள் நடைபெறாத காலகட்டங் களில், பூக்களின் விலை மிகவும் குறைவாக விற்கப்படும் காலங்களில், மிகவும் பயனுள்ள தொழில் நுட்பமாகும்.
ஏற்றுமதியாளர்களுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும்.
ஊடுபயிராக அதிக மகசூல்
தென்னை ஊடுபயிராக அதிக மகசூல் தரும் டெலிக்கோனியா மலர் வகைகளில் நான்கு டெலிக்கோனியா இனங்களான ஐரிஸ், டிராபிகஸ், வெஜ்னேரியா ரெட், ரெட் கிறிஸ்மஸ் ஆகியவற்றில் நடைபெற்ற சோதனையில் டிராபிக்ஸ் தொடர்ந்து அதிக மகசூலை கொடுத்தது.
தென்னை ஊடுபயிராக அதிக மகசூல் தரும் உயர்ரக மலர் வகைகளில் ஆர்க்கிடுகள் 50% மேல்புற செயற்கை நிழலில் வளர்க்கப்பட்ட தில் அராந்திரா வகை யான ‘அன்னி பிளாக்’ அதிக மகசூலை அளித்துள்ளது.
விசுவாசபுரத்தில் அமைந்துள்ள மலர் ஆராய்ச்சி நிலையத்தின் வாயிலாக விவசாயிகள், மலர் வியாபாரிகள், புதிய தொழில் துவங்குபவர்கள், நுகர்வோர்கள் உட்பட பலர் பொருளாதார ரீதியாக மிகவும் பயன்பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு ஆட்சியர் மா.அரவிந்த், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



