fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 6,282 பேருக்கு பெட்டகப் பை, வங்கி அட்டை

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 6,282 பேருக்கு பெட்டகப் பை, வங்கி அட்டை

சேலம் மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, வங்கிக் கணக்குகளில் உதவித் தொகைகள் வரவு வைக்கப்படுகின்றன.

“பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை யற்றிடும் காணீர்!” – என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, பெண்களுடைய அறிவை வளர்த்தால் உலகில் பேதமை போகும் என்பதே உண்மை.

எனவே பெண்கள் அனைவரும் கல்வி என்னும் நிரந்தர செல்வத்தினை பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முன்னோடித் திட்டமான ‘புதுமைப் பெண்’ என்னும் உன்னத திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வீதம் உதவித் தொகை வழங்கும் வகையில், சென்னையில் கடந்த 05.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்ததாவது:
அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை என்ற பெயரை ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை’ என முதல்வர் மாற்றம் செய்துள்ளார்.

பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களைப் பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக்கிட அடித்தளமாக ‘புதுமைப் பெண்’ என்னும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, 17 கல்லூரிகளைச் சேர்ந்த 872 மாணவிகளுக்கு, வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய ‘புதுமைப் பெண்’ பெட்டகப்பை மற்றும் மாதம் ரூ.1,000/- உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகள் (ஞிமீதீவீt சிணீக்ஷீபீ) 05.09.2022 வழங்கப்பட்டன.

தகுதிகள்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளாக இருத்தல் வேண்டும்.

மாணவிகள் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

ஒரு குடும்பத்தில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

உச்சவரம்பு இல்லை
இத்திட்டத்தின் கீழ் பயனடைய குடும்ப வருமான உச்சவரம்பு கிடையாது. புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு (டிப்ளமோ / மிஜிமி), இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொறுத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொறுத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.

தகுதியுடைய மாணவிகளுக்கு மாதந்தோறும் உயர்கல்வி உறுதித்தொகையாக ரூ.1,000/- வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், சேலம் மாவட்டத்தில் 6,282 கல்லூரி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கு துவங்கப்பட்டு, அவர்களுக்குரிய உதவித் தொகைகள் வரவு வைக்கப்படுகின்றன.

பெண் கல்விக்காக எந்த பெற்றோரும் பொருளாதார ரீதியில் சுமையாகக் கருதக்கூடாது என்பதற்காகவும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டும், அவர்களுக்கு உயர் கல்வியை உறுதி செய்து பாலின இடைவெளியைச் சமன் செய்யும் பொருட்டும் முதல்வரின் கனவுத் திட்டமான இப் ‘புதுமைப் பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தெரிவித்தார்.

“அதிர்ச்சியும், ஆனந்தமும்”
‘புதுமைப் பெண்’ திட்டத்தில் பயனடைந்துள்ள மாணவி ப. கலைச்செல்வி தெரிவித்ததாவது:

ஆத்தூரில் இயங்கிவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணிதம் முதலாமாண்டு பயின்று வருகிறேன். தந்தை தனியார் கடையில் வேலை பார்க்கிறார். ஆரம்பப்பள் ளியிலிருந்து அரசுப் பள்ளியிலேயே கல்வி பயின்று வந்தேன். உயர்கல்வி மீது உள்ள ஆர்வத்தால், தனியார் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ‘புதுமைப் பெண்’ என்ற திட்டத்தை அறிவித்து மாதந்தோறும் ரூ.1,000/- வழங்குகிறார். இதற்காக எனக்கென தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

முதல்வர் சென்னையிலிருந்து இத்திட்டத்தினை தொடங்கி வைத்த மறுகணமே ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக செல்போனிற்கு வந்தது, மிகுந்த ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் எற்படுத்தியது.

இத்தகைய சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு குடும்பத்தின் சார்பிலும், மாணவிகளின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“போட்டித் தேர்வு எழுத உதவும்”
மாணவி டி. நர்மதா தெரிவித்ததாவது:
தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் முதலாமாண்டு பயின்று வருகிறேன். சொந்த ஊர் தாரமங்கலம். தந்தை நெசவுத் தொழில் செய்கிறார். அவருடைய வருமானத்தை வைத்துதான் உயர்கல்வி பயின்று வருகிறேன்.

தாரமங்கலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். பணத்துக்கு சிரமம் இருந்தாலும், என் விருப்பப்படி கல்லூரியில் சேர்த்தனர்.

நாங்கள் எதிர்பார்க்காத வகையில் ‘புதுமைப் பெண்’ என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/-உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததை அறிந்து, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். பரிசீலனைக்குப் பின் விண்ணப்பம் ஏற்கப்பட்டது.

முதல்வர் இத்திட்டத்தினை துவங்கிய 05.09.2022 அன்றே ரூ.1,000/- வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக வந்தது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்பணத்தைக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கும், அரசு வேலைவாய்ப்பினை பெற உதவும் போட்டித்தேர்வுகளுக்கும் தயார் செய்து கொள்வேன்.

அரசுப் பள்ளியில் பயின்று என்னைப் போன்று உயர்கல்வி பயிலும் மாணவிகள் எதிர்காலத்தில் பல சாதனைகளை புரிவோம் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது. மாணவிகளின் சார்பாக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
ச. சுவாமிநாதன்,
செய்தி – மக்கள் தொடர்பு அலுவலர்,
சேலம் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img