இந்தியாவின் மிகப்பெரிய தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், மொத்த வணிக மதிப்பின் அடிப்படையில், அனைத்துத் தகுதியுள்ள பாலிசிதாரர்களுக்கும் 2022-ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர போனஸாக ரூ. 968.8 கோடியை அறிவித்துள்ளது.
இவ்வாறு ஊக்கத் தொகை வழங்கப்படுவது இது தொடர்ந்து 16-வது ஆண்டாகும். அத்துடன் இதுநாள் வரை இல்லாத அதிகபட்ச போனஸ் தொகை இதுவாகும்.
ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி என்.எஸ். கண்ணன் கூறுகையில், “2022-ம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர போனஸாக மொத்தம் ரூ. 968.8 கோடியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இது 2021-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகமாகும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்காக வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்துள்ளனர். இந்த போனஸ் எங்களது பங்கேற்புப் பாலிசிதாரர்கள் தங்கள் நிதி இலக்குகளை நோக்கி ஒருபடி மேலே செல்ல உதவும் என்று உறுதியாக நம்புகிறோம்.
கோவிட் -19 தொற்றுக் காலத்தில் வணிகத் தடைகள் மற்றும் நிலையற்ற தன்மையால் பாதிப்புகள் ஏற்பட்டபோதும், எங்களது நீண்ட கால நிதி மேலாண்மை தத்துவம் மற்றும் வலுவான முதலீடு மற்றும் இடர் மேலாண்மை கொள்கைகள் ஆகியவை காரணமாக எந்த பாதிப்பும் நிறுவனத்துக்கு ஏற்படவில்லை.
நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே சந்தை சுழற்சி முழுவதுமாக செயல்படாத சொத்துகள் பூஜ்ஜியமாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.



