தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளின் நலன் கருதி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
டாக்டர் செந்தில்குமார் எம்.பி. தலைமை தாங்கி, நவீன கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மகளிர் பள்ளிகளில் நவீன கழிப்பறை கட்டிடம் கட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பள்ளியில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறை கட்டடத்தை பராமரிக்க பெண் பணியாளரை நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 6 மலைக் கிராமங்களுக்கு சாலைகள் இல்லாத நிலை உள்ளன. இந்த சாலைகள் அமைக்க வனத்துறையிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் மலைக் கிராமத்தில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
தலைமை ஆசிரியை தெரசாள், முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் அன்ப ழகன், முல்லைவேந்தன், சுருளிராஜன், கனகராஜ், ரவி, காசிநாதன் நிர்வாகிகள் ஜெகன், அசோக்குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.



