தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நூற்றாண்டு விழாவை யொட்டி, வங்கி சார்பில் வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி வாகனங்களை பொது மக்கள் பயன் பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.பி.ராமமூர்த்தி, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்குகிறது. வங்கியின் நூற்றாண்டு விழாவின் ஒரு முன்னெடுப்பாக ‘கூட்டாண்மை சமூக பங்களிப்பு’ மூலம் கீழ்க்கண்ட சமூக நல உதவிகளை சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.
விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். வங்கி வழங்கிய சமூக நல உதவிகளை முறையாக நடைமுறைப்படுத்தி விழாப் பேருரையாற்றினார்.
கொளத்தூரில் உள்ள அரசு பெரிபெரல் (Peripheral) மருத்துவமனைக்கு ஒரு மருத்துவ ஆம்புலன்ஸ், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் 210 பேர் அமர்வதற்கு, மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகள் வழங்கப்பட்டன.
கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு 1500 மாணவர்கள் அமரத் தக்க வகையில் 300 டெஸ்க் வழங்கப்பட்டது.
கொளத்தூர் அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டது. இரண்டு கோவிட்- 19 தடுப்பூசி வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து முதல்வர் தொடங்கி வைத்தார்.
விழாவில், அமைச்சர்கள், வங்கி பொது மேலாளர்கள், இயக்குநர்கள் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



