கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாஜக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் கோபால்சாமி ஆகிய இருவரும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கூட்டரங்கு அறைக்குள் வைக்க வேண்டும் என கூறி வெளி நடப்பு செய்தனர்.
இது குறித்து பலமுறை மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்தி அசோகனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் மோடியின் புகைப்படம் வைக்காததால் பாரதிய ஜனதா கட்சி கவுன்சிலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



