கோவை, காருண்யா நகரில் வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) A++ உயர் தர அதிகபட்ச அங்கீகாரம் 5 வருடங்களுக்கு வழங்கி உள்ளது.
கடந்த 36 ஆண்டு காலமாக இயங்கி வரும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகள், தங்கும் வசதிகளோடு சிறுவாணி மலைச்சாரலில் செயல்பட்டு வருகிறது.
தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளான செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence) சைபர் செக்யூரிட்டி, டேட்டா சய்ன்ஸ், ஆப்டோமேட்ரி, தடய அறிவியல், குற்றவியல், தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல், மீடியா ஆகியவை நடத்தப்படுகின்றன. பல பாடப்பிரிவுகள் தேசிய மதிப்பீட்டு குழுவினரால் (NBA)
அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ஏழு பேர் கொண்ட நிபுணர்கள் குழு கடந்த 10 முதல் 12 தேதிகளில் காருண்யாவுக்கு விஜயம் செய்து, காருண்யா சமர்ப்பித்த சுய அறிக்கைகளை மதிப்பீடு செய்து, கட்டமைப்பு, ஆய்வகங்கள், கற்றல் வசதிகள் மற்றும் பல்வேறு துறைகளின் ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆராய்ந்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்து அறிக்கையை சமர்ப்பித்தது. நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், “நாக்” குழு அதிகபட்ச அங்கீகாரமான A++ வழங்கி உள்ளது.
காருண்யாவில் போதுமான கட்டமைப்பு, கணினி ஆய்வகங்கள், விளையாட்டரங்கம், கேன்டீன், ஆடிட்டோரியம் ஆகியவை சிறப்பாக உள்ளன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம், முன்னாள் மாணவர்களின் அடித்தளம், காருண்யாவின் வளர்ச்சி, நற்பெயருக்கு பங்களிக்க உள்ள விருப்பம், 25 கோடிக்கும் அதிகமான ஆராய்ச்சிகள், திட்டங்கள், 14 புதுமையான கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகள், 6300-க்கும் அதிகமான ஸ்கோபஸ் ஆராய்ச்சி கட்டுரைகள், 8 தொழிற்துறை நிறுவனங்களோடு இணைப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக கிராமங்களை தத்தெடுத்தல், நீர், அறிவியல் தொழில்நுட்பத்திற்கான தனித்துவ பங்களிப்பு, அதிநவீன ஆய்வகங்கள், 8 மத்திய மற்றும் 10 தொழில் உதவி ஆய்வகங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படுவதை இக்கவுன்சில் முன்னிலைப்படுத்தி உள்ளது.
இக்குழு, மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தின் ஆதரவுடன் அமைந்துள்ள ஆய்வகங்கள், நானோ-மிஷன் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஆய்வகங்கள், சூப்பர்சோனிக் மற்றும் சப்சோனிக் விண்வெளி பொறியியல் ஆய்வகங்கள், விலங்கு ஆய்வுக்கூடங்கள், அணு ஆராய்ச்சி பயிற்சி ஆய்வகங்கள், தொழில்துறை கூட்டு ஆய்வகங்களான சீமன்ஸ், ஐபிஎம், சிஸ்கோ, சூயஸ், ஏ.எம்.இசட், டெஸ்ஸால்வ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளின் சங்கமமான “அன்பாக்ஸ்” எனும் காட்சியகத்தையும் பாராட்டியது.
வேந்தர் டாக்டர் பால் தினகரன் ஆலோசனையின்பேரில், காருண்யா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் சமுதாயத்தில் நிலவி வரும் இடர்களை நீக்க தண்ணீர், உணவு, ஆற்றல், சுகாதாரம் போன்றவற்றின் மேம்பட்ட ஆராய்ச்சிகளை ஊக்குவித்து தீர்வுகளைக் காண முழு உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
அதிகபட்ச அங்கீகாரம் பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய துணைவேந்தர், பதிவாளர், இணை துணைவேந்தர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் குழு, முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பணியாளர்களை வேந்தர் டாக்டர் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன் ஆகியோர் வாழ்த்தினர்.



