உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பிரபலமாகி உள்ள நிலையில் இந்தியாவில் ‘பிக் புல்’ என்னும் பெயரில் கிரிப்டோ கரன்சியை பிக் புல் டெக்னோசாப்ட் நிறு வனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான முதல் டோக்கனை நடிகர் சுஹேல் சேத், டெல்லி சாணக்கியபுரியில் உள்ள லீலா ஓட்டலில் வெளியிட்டார். ‘பிக் புல்’ கிரிப்டோ கரன்சி 11 வர்த்தக கருவிகளைக் கொண்டுள்ளது.
கிரிப்டோ கரன்சியை தற்போது நாணய வழங்கல் முறையில் பினான்ஸ் ஸ்மார்ட் செயின் இணையதளத்தில் உள்ள டிரஸ்ட் வாலட் மூலம் வாங்கலாம். ‘பிக் புல்’ கிரிப்டோ கரன்சி ஒன்று 1 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாணய வழங்கல் முறையின் கீழ் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு 1 லட்சம் கிரிப்டோ கரன்சியும் 75 பைசா வீதம் அதிகரிக்கப்படும். இந்த கரன்சி பொது வர்த்தகத்திற்கு வரும்போது அதன் மதிப்பிடப்பட்ட விலை 1 ரூபாய் ஆகும்.
இந்த கரன்சி இன்னும் சில பெரிய எக்சேஞ்சுகளில் பட்டியலிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு வரும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும்.
இதற்கான மேம்பாடு மற்றும் திட்டப் பணிகளை ‘பிக் புல்’ டெவலப்பரும் இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான ரவீந்திர போட்டார் மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், கிரிப்டோ கரன்சியை குறைந்த பரிவர்த்தனை கட்டணத்தில் ஒருவர் எந்த அளவு வாங்க விரும்புகிறாரோ அதற்கேற்ப அவருக்கு கிடைக்கச் செய்வதே முக்கிய நோக்கமாகும்.
இதன் பரிவர்த்தனையானது 1 ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் வரை உள்ளது. இதை நாங்கள் 1 ரூபாய் டோக்கன் முறையில் துவங்கி நாணய வழங்கல் முறையில் வெளியிடுகிறோம்.
‘பிக் புல்’ கிரிப்டோ கரன்சி அனைவரும் அதாவது தினசரி கூலி செய்பவர்கள் முதல் உயர் பதவியில் இருப்பவர்கள் வரை எளிதாக வாங்கும் வகையில் இருக்கும் என்றார்.



