எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும், நிதானமான மனநிலையுடன் யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டுமே தவிர, பயத்தோடு தவறான முடிவுகளை எடுப்பது போன்றவை சரியான தீர்வு ஆகாது என்று உலக மனநல நாள் கடைப்பிடிப்பதையொட்டி கோவை மருத்துவர் என்.எஸ்.மணி அறிவுறுத்தி உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதை உலக சுகாதார கூட்டமைப்பு கொண்டாடுகிறது. இந்த கூட்டமைப்பு 1994 முதல், தன்னுடைய பரப்புரையை ஆரம்பிக்கும்போது மன நலத்திற்கான தேவைகளை தரம் உயர்த்துவோம் என்ற தலைப்பில் துவங்கியது. இந்த ஆண்டு “அனைவருக்கும் மனநலம், வாருங்கள் செயல் படுத்துவோம்” என்ற தலைப்பில் செயல்படுத்த உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றை சமமற்ற நிலைமை உலகம் இருப்பதாக கருதுகிறது.
கடந்த மே மாதத்தில் நடந்த உலக சுகாதார கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச அளவில் மக்களின் மன நலத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வழிமுறைகள் வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் விவாதித்து முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் இந்திய மக்களின் மனநல ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும் என்பதே இந்திய மனநல மருத்துவர்களின் எண்ணமும். அதில் “உங்களையும் பார்த்துக் கொள்ளுங்கள், அருகில் இருப்பவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகிறார்கள்.
உடல் நலக் கோளாறு உடனே வெளியே தெரிந்து விடும். மனநலக் கோளாறு வெளியே தெரிய, வெளிப்பட பல காலம் ஆகலாம். அதை புரிய வைப்பதும் உணர்த்துவதும் அவ்வளவு எளிய காரியம் இல்லை கோவிட்-19 பெருந்தொற்றின் பேரழிவு தேசத்தின் எல்லைகளை கடந்தும் மனித உயிர்களுக்கு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டில் அனைவரும் மறக்க முடியாத நிகழ்வு. கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க மக்கள் எதிர்கொண்ட உடல்நல, மன நல துயரங்கள் ஏராளம். குறிப்பாக கோவிட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் முன் களப்பணியாளர்கள், நோயால் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
பெருந்தொற்று நோயால் மக்கள் யாரும், ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை, சமூக தொடர்பு இல்லாத நிலைமை இருந்தது மட்டும் அல்லாமல், உயிர் இழப்புகளை அன்றாடம் பார்த்தது, கேட்டது அவர்களின் ஆழ் மனதில் தாக்கி, அந்த ஆழ் மனதில் சிறிய கீறலையும் உருவாக்கியது என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. அந்த உள்/ஆழ் மனதில் ஏற்பட்டுள்ள சிறிய கீறல், உடலை மட்டும் அல்லாமல் மனதையும் பாதித்துள்ளது. தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அதிகம் இருப்பதை உலகில் அனைத்து மனநல மருத்துவர்களும், மனநல ஆலோசகர்களும் கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள்.
தமிழக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலம், தொழில்களின் முன்னோடி, மருத்துவம், கல்வி என அனைத்து துறைகளிலும் செழித்து வளர்ந்துள்ளது. கொங்கு மண் கொரோனாவின் தாக்கத்தால் நிலை குலைந்துபோய் நிற்கிறது. சிறு தொழில்முனைவோர் முதல் பெருந்தொழில் அதிபர்கள் வரை கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
தொழில் நசிவால் எண்ணற்ற தொழிலாளர்களும் வேலையிழப்புக்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார பாதிப்புகள் உடல்நல பாதிப்பாகவும், அதுவே பின்னர் மனநல பாதிப்பாகவும் உருவெடுக்கிறது. இந்த நெருக்கடியில் இருந்து எப்படி மீள்வோம் என்ற பதட்டம், பயம், மிகை அச்சம், மனச்சோர்வு, குற்ற உணர்வு, எதிர்மறை எண்ணங்கள், திரும்பத் திரும்ப உருவாக்குதல் போன்றவை, தூக்கமின்மையில் துவங்கி சில வேலைகளில் தற்கொலைப் பெருந்துயரில் கொண்டு போய் நிறுத்தும். மனநல மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக நலப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், களப்பணியாளர்கள் ஆகியோர் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கின்றனர்.
செய்திகள் வாயிலாக மக்களும் அறிகிறார்கள். இந்த பாதிப்பு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏற்படுகிறது. எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும், நிதானமான மனநிலையுடன் யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். நெருக்கடிகள் வரும், போகும். அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டுமே தவிர, பயத்தோடு தவறான முடிவுகளை எடுப்பது போன்றவை சரியான தீர்வு ஆகாது.
மனநல பிரச்சனைகள் இருப்பவர்கள், எவ்வித தயக்கமும் இல்லாமல் அருகில் உள்ள தகுதியான அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர் மனநல மருத்துவர்களை அணுகி உரிய மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் முதல் நிலை நகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.



