fbpx
Homeபிற செய்திகள்நாட்டுக்கு நலன் தரும் விமர்சனமே தேவை!

நாட்டுக்கு நலன் தரும் விமர்சனமே தேவை!

அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வந்திருந்தார். அவரை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

ஆனால் முதல்வரின் பேச்சை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். `தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய உரைக்காக நான் வெட்கப்படுகிறேன். முதல்வர் சொன்ன ஒவ்வொரு தகவலையும் பாஜக மறுத்து அறிக்கை வெளியிடும்‘ என்றார்.

பாஜக தலைவர் அண்ணாமலை எதற்கெடுத்தாலும் தமிழக அரசின் செயல்பாடுகளில் விமர்சனங்களை முன் வைக்கிறார். விமர்சன யுத்தம் செய்கிறார்.

ஒன்றுமில்லாததை எல்லாம் அவர் ஊதிப் பெருக்குகிறார், இது அவர் மீது தமிழக மக்களுக்கு ஒருவித வெறுப்பைத் தான் உண்டு பண்ணுகிறது… என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைப்பது முதலமைச்சரின் கடமை. அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.

மேடையை அலங்கரித்து திரும்புவதற்கு நடந்தது ஒன்றும் கொலு பொம்மை விழா அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடி இருக்கிறார்.

முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி எதையும் சொல்லாத பிரதமரின் உரைதான் ஏமாற்றமளிப்பதாக உள்ளது. அண்ணாமலை விமர்சிப்பது அவரின் அரைவேக்காட்டுத் தனத்தையே காட்டுகிறது என்றும் அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோரும் அண்ணாமலையை கடுமையாக கண்டித்துள்ளனர்.

பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் அரசியல் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது என்று மதிமுக எதிர்வினையாற்றி இருக்கிறது.

பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்கும் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களின் கோரிக்கைகளை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்.

அரசின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை தான். அதிலும் முறை வேண்டும். ஆரோக்கியமான விமர்சனங்களே நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும்.

‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.’ & என்ற குறளை நினைவில் ஏற்றிச் செயல்படுவதே சாலச்சிறந்தது!

படிக்க வேண்டும்

spot_img