Homeபிற செய்திகள்தமிழகத்தில் 2026 ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைக்கும் தர்மபுரியில் அன்புமணி பேட்டி

தமிழகத்தில் 2026 ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி அமைக்கும் தர்மபுரியில் அன்புமணி பேட்டி

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்க டேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பிக்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, , கம்பைநல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் மதியழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி இளைஞர் சங்க தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் மறைந்த பா.ம.க. நிர்வாகிகள் மன்னன், சுப்பிரமணியன், ஸ்ரீசிவம் ஆகியோரது உருவ படங்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசியதாவது:

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் தர்மபுரி. இதை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று நான் சபதம் எடுத்தேன். 5 ஆண்டுகள் எம். பி.யாக. பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தமிழகத்தில் முதல் 5 மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரியை மாற்ற பாடுபடுவேன் என உறுதி அளித்தேன். இப்போதும் அந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.

பதவி பொறுப்புக்காக நாம் கட்சிக்கு வரவில்லை. மிகவும் பின்தங்கிய மக்கள் முன்னுக்கு வர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அழைத்ததால் இந்த இயக்கத்திற்கு வந்தோம்.

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை ஆகிய 2 ஆறுகள் ஓடிய போதும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. பா.ம.க. நடத்திய மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது.

ஆனால் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை அல்ல. அவர்கள் கடமையைத்தான் செய்தார்கள்.

உண்மையில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி பா.ம.க.தான் சாதனை செய்தது. தற்போது புதிதாக திராவிட மாடல் என்ற சொல் திடீரென உருவாகி உள்ளது.

10 ,11, 12- ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மது பாட்டில்களை கையில் பிடித்து மது அருந்தும் நிலை உருவாகி இருப்பது தான் திராவிட மாடல். பாட்டாளி மாடலை நடைமுறைப்படுத்த எங்களிடம் ஒரு முறை ஆட்சி அதிகாரத்தை வழங்குங்கள்.

தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இல்லாத மது விலக்கு அமல், இலவசக் கல்வி, இலவச மருத்துவம், விவசாய விளை பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்து கொள்ளும் நிலை ஆகியவையே பாட்டாளி மாடலாகும்.

கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் மூத்த நிர்வாகிகள் உடன் இணைந்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்கும். இதற்காக பல்வேறு திட்டங்களை நாம் வகுத்துள்ளோம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சரிடம் எனது தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டில் உள் இட ஒதுக்கீட்டை சட்டமாக இயற்றி நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் வேலையின்றி 4.5 லட்சம் பேர் பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இங்கு வேலை வாய்ப்பை உருவாக்க சிப்காட் பணிகளை முடித்து விரைவில் தொடங்க வேண்டும். மொரப்பூர்-தர்மபுரி ரயில்வே இணைப்பு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும். ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை அரசு தடை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கொண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

முடிவில் தர்மபுரி நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்க« டசன் ஆகியோர் நன்றி கூறினர்.

முன்னதாக கூட்டத்து க்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு தர்மபுரி நகர எல்லையான குண்டலப் பட்டியில் மேளதாளங்கள் முழங்க பா.ம.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை நூற்றுக்கணக்கான கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து தர்மபுரி நகருக்கு அழைத்து வந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img