தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புது தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவரை முதல்வரான பிறகு மு.க. ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.
இச்சந்திப்புக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், மதுரையில் அமைக்கப்படவிருக்கும் நூலகத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கும் கிண்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதல்வர் பேசியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினுடன் மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் சிறப்பு விமானத்தில் நேற்று டெல்லி வந்தனர்.
தமிழக முதல்வரை டெல்லி விமானநிலையத்தில் நாடாளுமன்ற திமுக தலைவர் பாலு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன்,
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, தமிழ் நாடு இல்ல உள்ளுறை ஆணையர் டாக்டர் ஜக்மோகன் சிங் ராஜூ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு டெல்லிக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து மேக்கேதாட்டு விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியது நினைவுகூரத்தக்கது.