கோவை மத்திய சிறையை, வெள்ளலு£ருக்கு இடம் மாற்றி விடலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறையினர் இதை ஏற்கும் பட்சத்தில், இன்னும் மூன்று முதல் நான்காண்டுகளில், கோவை மத்திய சிறை வெள்ளலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விடும்.
கோவை மத்திய சிறை, 165 ஏக்கர் பரப்பில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 1872ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறை வளாகத்தில், 2134 கைதிகளை அடைப்பதற்கான வசதிகள் உள்ளன. நேற்றைய நிலவரப்படி, 2034 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள், ஊழியர்கள் என 480 பேர் பணியாற்றுகின்றனர்.இந்த வளாகத்தில், 45 ஏக்கர் நிலம் 11 ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
மீதமுள்ள 120 ஏக்கர் நிலத்தில் தான் கைதிகளை அடைக்கும் கட்டடங்கள், வெவ்வேறு தொழில் செய்வதற்கான கூடங்கள் உள்ளன.
இவற்றை மொத்தமாக வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, 165 ஏக்கரிலும் செம்மொழி பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிறைக்கு மாற்றிடம் தேடும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் தரப்பில், வெள்ளலூர் அதிவிரைவு அதிரடிப்படை வளாகம் அருகே, சிறையை மாற்றி விடலாம் என அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை சிறைத்துறையினர் ஏற்கும் பட்சத்தில், குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 4 ஆண்டு காலத்தில் மத்திய சிறை, வெள்ளலூருக்கு மாற்றப்பட்டு விடும்.’
சிறை அமைக்கப்படும் இடம், அரசு மருத்துவமனையில் இருந்து அதிகபட்சம் 10 நிமிடம் பயணத்தொலைவுக்குள் இருப்பது நல்லது’ என்பது, சிறைத்துறையினரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன், அப்போதைய மாநில அரசு சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்தது. அப்போது மருதமலை அடிவாரத்தில் நிலம் ஒதுக்க ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் அந்த இடம் பாதுகாப்பற்றது என்ற காரணத்தால், சிறைத்துறையினர் நிராகரித்து விட்டனர்.
தற்போது மாற்ற உத்தேசித்துள்ள வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடம், நகரப்பகுதிக்குள் இருப்பதுடன், பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.



