fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சி- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சி- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். 
இந்நிகழ்வில் பல்வேறு நிறுவனங்கள் அவர்களது பங்களிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான் என தெரிவித்தார்.  
இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது 12 நிறுவனங்கள் தான் இருந்தது  என கூறிய அவர்,  தற்பொழுது 132 நிறுவனங்கள் இணைந்துள்ளது என்றார். மேலும் தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் விஸ்வநாத் ஆனந்த், வேணு ஸ்ரீனிவாசன், உட்பட பல்வேறு உறுப்பினர்கள் உள்ளனர். சென்னையில் திட்டம் துவங்கப்பட்டு  இந்த ஆறு மாதத்தில், 7294 பள்ளிகளுக்கு என்னென்ன தேவைகள் உள்ளது என கேட்டறிந்து அவை சென்றடைந்திருக்கின்றன. இதனை தொடர்ந்து நாம் அதிக படுத்த வேண்டும். கோவை மண்டலத்தில் இருக்கின்ற CII வுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு தொழில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர், இன்று மட்டும் 13.95 கோடி பங்களிப்பு வந்துள்ளது. இதனை கொண்டு ஒவ்வொரு பள்ளியையும் மேம்படுத்த வேண்டும். 


அரசாங்கத்தினுடைய இந்த திட்டத்தினை ஊடகவியலாளர்கள் வெகுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தரப்பில் 9 தனியார் பள்ளிகளுக்கு ஜாதி, மதம் குறித்து மாணவர்களின் பதிவேட்டில் குறிப்பிடக் கூடாது என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, இது மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, மாவட்ட அளவில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால் இதுவரை நான் அதனை பார்க்கவில்லை அதனை பார்த்து ஆராய்ந்து பின்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளை தேடி வந்துள்ளார்கள், ஆகஸ்ட் மாதம் வரை சேர்க்கையின் கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் கடைசி நாள் முடிந்த பின்பு எத்தனை சதவிகிதமானவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டிகளை கலந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளி வருகையில் ஆப்சண்ட் போடப்பட்டுள்ளதாக எழுந்த கேள்விக்கு இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 


பள்ளி கழிவறைகளை பொருத்தவரை கூட்டத்தொடரில் பேசியது போல் 2900க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கென நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை கூட தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது அங்குள்ள கழிவறைகளை இன்னும் மேம்படுத்த வேண்டி உள்ளது என்ற அறிவுரையை வழங்கி உள்ளேன். எனவே ஆட்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் அந்தந்த நகர் மற்றும் பஞ்சாயத்து மூலம் ஆட்களை நியமிக்க அறிவுறுத்தி நியமித்து வருகிறோம். 


நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படுவது குறித்தான கேள்விக்கு NOC வரும்போது அது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார். 3 வருடங்களாக லேப்டாப் வழங்கப்படாதது குறித்து கேள்விக்கு கொரோனா காலத்திற்குப் பின்பு நிதி சுமைகள் அதிகமாக உள்ளதால் அவற்றையெல்லாம் களைந்து லேப்டாப் ஆக அளிக்கலாமா அல்லது டேப்லெட்டாக கொடுக்கலாமா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.


பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த பள்ளி கட்டணம் என்ன என்பது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்படாதது, குறித்து கேள்வி எழுப்பியதற்கு இது குறித்து தனியார் பள்ளி ஆணையத்திடம் பேசுகிறேன் என்றார். உளவியல் மருத்துவர்கள் தமிழகத்தில் போதுமான அளவிற்கு உள்ளார்கள் மேலும் தேவைப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மலைவாழ் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வசதிகள் குறைவாக உள்ளது குறித்த கேள்விக்கு, அதில் இரண்டு துறைகள் வருகிறது, அவர்கள் வெவ்வேறு கருத்துகளை கூறுவதால் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img