கோவை மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நாளை முதல் (ஆக.23) வரும் செப். 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு அறிவித்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேலும் மண்டல மற்றும் கோட்ட அளவிலும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழக அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன், பின்வரும் செயல்பாடுகள் அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. செப்.1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9,10,11,12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில், வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் அனைத்து மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் கல்லூரிகள், பள்ளிகள், காப்பகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியம் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், காப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை கல்வி, பள்ளி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சி பெறுபவர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் விடுதிகள் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (எப்எல்2, எப்எல்3) செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் ஆகஸ்ட் 23-ம் தேதியில் (திங்கள்கிழமை) இருந்து இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் 23-8-21 முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை திரையரங்கு உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். கூடுதல் கட்டுப்பாடுகள் கோவை மாவட்டம் கேரள மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால், தற்போது மாவட்டத்தில் இருக்கும் கொரோனா தொற்றை மேலும் குறைக்க கீழ்காணும் கூடுதல் கட்டுப்பாடுகள் 23-08-21 முதல் விதிக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை கோவை மாநகராட்சி ஆணையரால் இன்று (ஆக.22) வணிகர் சங்க பிரதிநிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய சாலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து மால்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டுச் சந்தை 25-08-21 முதல் தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
கேரள-தமிழக மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திற்குள் விமானம், தொடர்வண்டி, மேற்படி சோதனைச் சாவடி வழியாக வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டRTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்திக் கொண்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசு அறிவித்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு பணிக்காக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



