fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி பூங்காக்களில் ‘ஆர்கானிக் பூக்கள்’- புது முயற்சியில் தோட்டக்கலைத் துறை

ஊட்டி பூங்காக்களில் ‘ஆர்கானிக் பூக்கள்’- புது முயற்சியில் தோட்டக்கலைத் துறை

வேளாண்மையில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்த விவசாயிகள், இயற்கை விவசாயத்தின் பக்கம் மீண்டும் அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுவும் குறிப்பாக இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ்’ எனப்படும் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு போன்ற மலைக் காய்கறிகளை அதிகம் விளைவிக்கும் நீலகிரி போன்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீலகிரியை முழுமையான ஆர்கானிக் விவசாய மாவட்டமாக மாற்றும் முயற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இயற்கை வேளாண்மைக்கான பல உதவிகளை வழங்கும் திட்டத்தை உருவாக்கினார்.

அதேபோல் இயற்கை விவசாயத்துக்கு மாறும் விவசாயிகளுக்குத் தோட்டக் கலைத்துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகள் கண்களுக்கு விருந்து படைக்க உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான மலர் நாற்றுகளை இயற்கை முறையில் வளர்த்து ஆர்கானிக் பூக்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

முன்முயற்சியாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவின் கடைக்கோடியில் கால்நடை தொழுவங்களை அமைத்து மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து இயற்கை உரம், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தச கவ்யம் போன்றவற்றை உருவாக்கி மலர்ச் செடிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மீதமிருக்கும் உரங்களை விவசாயிகளுக்கு தோட் டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த முயற் சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆர்கானிக் பூக்களை உருவாக்கும் முன்னெடுப்பு குறித்து அரசு தாவ ரவியல் பூங்காவின் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,கடந்த ஓராண்டாக இந்த முறையில் ஈடுபட்டு வருகிறோம்.

நமது நாற்றாங்காலில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மலர் நாற்றுகளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றை இயற்கை முறையில் வளர்க்கும் வகையில் பூங்கா வளாகத்தில் 3 டன் அளவில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்து வருகிறோம்.

இவற்றை மலர்ச் செடிகளுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் பூச்செடிகளின் வளர்ச்சி, பூக்களின் நிறம் போன்றவற்றில் நல்ல பலன் தெரிகிறது. பூச்செடிகளுக்கு போக மீதமிருக்கும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்` என்றார்.

படிக்க வேண்டும்

spot_img