கோவையில் இரண்டு குழந்தைகளுடன் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (24). இவரது மனைவி டன்கலா (22). இந்த தம்பதியினருக்கு அலிசா என்ற மூன்று வயது பெண் குழந்தை, ருத்ரா என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளனர்.
இவர்கள் அனைவரும் குப்பனூர் பகுதியில் தங்கி உள்ளனர். மேலும், ராஜ்குமார் மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறார். இந்த சூழலில், ராஜ்குமார் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் மதிய உணவுக்காக வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள் புறமாக பூட்டப்பட்டது. சந்தேகமடைந்த ராஜ்குமார் ஜன்னல் வழியாக பார்த்த போது மனைவி டன்கலா மற்றும் இரண்டு குழந்தைகளும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது மூவரும் உயிரிழந்திருப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பேரூர் போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவிக்கு தொடர் தலைவலி மற்றும் உடல் உபாதை இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



