ஆராய்ச்சிகளை வலுப்படுத் தாமல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல இயலாது என்று பேராசிரியர் டி.கண்ணதாசன் பேசினார்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பன்னாட்டு வணிகத்துறை சார்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்.) நிதியுதவியிடன், உயர்கல்வி குறித்த 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று (பிப்.10) தொடங்கியது.
ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பன்னாட்டு வணிகத்துறைத் தலைவர் முனைவர் ஐ.பர்வீன் பானு வரவேற்றார்.
கோவை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் டி.கண்ணதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சி பரந்துபட்ட உலகத்தை சிறு கிராமமாக மாற்றி விட்டது. எல்லா துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. டிஜிட்டல்மயமாகி வருகிறது. மிகக்குறைந்த தொகைக்கு பொருட்கள் வாங்குபவர்கள் கூட, ஸ்கேனர் உதவியுடன் பணப்பரிவர்த் தனை செய்து வருகின்றனர். அனைத்து துறைகளும் கணினிமயமாகிவிட்டன.
மத்திய, மாநில அரசுகள் உயர்கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதைக்கொண்டு ஆராய்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அவர்களின் ஆராய்ச்சி அறிவைத் தூண்ட வேண்டும். ஆராய்ச்சியை வலுப்படுத்தாமல் நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல இயலாது.
இவ்வாறு டி.கண்ணதாசன் பேசினார்.
மாணவர் நல டீன் முனைவர் ஜெ.சண்முகானந்தவடிவேல் பேசினார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.ரம்யா நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



