விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு வட்டாரத்தில் சுந்தரபாண் டியம், மீனாட்சிபுரம், கோட்டை யூர், தம்பிபட்டி, இலந்தைகுளம் ஆகிய கிராமங்களில் தற்போது பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டு 40-45 நாள் பயிராக உள்ளது.
இந்நிலையில் பருத்தியிலுள்ள தண்டு கூண்வண்டு தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர், வேளாண்மை இணை இயக்குநர் ச.உத்தண்டராமன் அறிவுரையின் பேரில் திருவில்லிபுத்தூர், பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சீ.வீரபத்திரன், வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப் பாடு) சி.இராஜேந்திரன், வத்திராயிருப்பு, வேளாண்மை உதவி இயக்குநர் உதயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வை நடத்தினர்.
கீழகோட்டையூர், மீனாட்சிபுரம், சுந்தரபாண் டியம் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரில் தண்டு கூண்வண்டு சேதத்தின் அறிகுறிகள் காணப்பட்டன. சேத நிலை 1 சதவீதம் அளவிற்கு காணப்பட்டது.
தண்டு கூண்வண்டு தாக்கிய இளந்தாவரங்கள் வாடியிருக்கும். தண்டின் மீது வீக்கம் காணப்படும். முதிர்ந்த செடிகள் வீரியம் மற்றும் வலிமை குறைந்து பலத்த காற்றின் காரணமாக செடி உடைந்து விடும்.
இதனை கட்டுப்படுத்திட ஒரு லிட்டர் தண்ணீரில் குளோரிபைரிபாஸ் 2 மி.லி. மற்றும் கார்பண்டாசிம் ஒரு கிராம் வீதம் கலந்து செடியை சுற்றி ஊற்ற வேண்டும் அல்லது கார்போபியூரான் குருணை மருந்தை இடலாம். 40-45-ம் நாளில் கண்டிப்பாக செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும்.
இவ்வாறு விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.



