ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கிதருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் விஜய நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு தமிழக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராவ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத் துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன் னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிராக புகார் அளித்த விஜய நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன. தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இதே போல புகார் கொடுத்த விஜய நல்லத் தம்பியும் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பணத்தை இழந்த வேல்பிரதீப் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நிர் மல்குமார், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி எம்.நிர்ம ல்குமார், இந்த முன்ஜாமீன் மனுக்கள் மீது நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில் கூறியிருப்ப தாவது: இருவர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது. எனவே, இருவரின் முன் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
வழக்கின் விசாரணைக்கு போலீசார் முன்னுரிமை தந்து குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார். மேலும், ராஜேந்திர பாலாஜியின் 3 கூட்டாளிகள் மற்றும் புகார் கொடுத்த விஜய நல்ல தம்பி ஆகிய 4 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் ராஜேந்திரபாலாஜியின் வக்கீல், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதால் இந்த உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு நீதிபதி, இது போன்ற வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்கள் தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் கடுமையாக பார்க்கும் என்று கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தார். இந்தநிலையில் ராஜேந்திரபாலாஜி நேற்று பிற்பகல் முதல் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதனால் அவரைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் எஸ்.பி. மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தனிப்படை போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் – கார் ஓட்டுநர் கைது
ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



