fbpx
Homeபிற செய்திகள்மூலப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பு பாதுகாக்க...

மூலப் பொருட்களின் தொடர் விலை உயர்வால் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பு பாதுகாக்க முதல்வரிடம் – கொடிசியா தலைவர் வலியுறுத்தல்

மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வால், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தகுந்த நடவடிக்கை எடுத்து தொழில்துறையினரை பாதுகாக்க வேண்டும் என்று கொடிசியா தலைவர் எம்.பி. ரமேஷ்பாபு, முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கொடிசியா தலைவர் எம்.வி. ரமேஷ் பாபு, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது இது பற்றி வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அளித்தார்.

மனுவில் குறிப்பிட்டி ருந்ததாவது: கோயம்புத்தூர் ஒரு பெரும் தொழில் மையமாக திகழ்வதற்கு உதவும் வகையில் ஜவுளி, பவுண்டரி, வால்வு, ஆட்டோமொபைல், பம்ப், மோட்டார், கம்ப்ரசர், வெட்கிரைண்டர், உள்ளிட்ட தொழில்களுக்கு இங்குள்ள சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தேவையான உதிரி பாகங்களை தயாரித்து அளித்து வருகின்றன.

அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து கொண்டே போவதை கட்டுப்படுத்த வேண்டி அரசாங்கத்துக்கு தொழில் அமைப்புகள் பலமுறை கோரிக்கைகள் அளித்தும், விலை உயர்வை தடுக்க இயலாத நிலை நீடிக்கிறது.

ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமாகி கொண்டே போவதோடு தொழிற்சாலைகளும் கடுமையான சிக்கலை சந்திக்க வேண்டி உள்ளது. மூலப்பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளதை தமிழக அரசின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

அனைத்து மூலப்பொருட்கள் மற்றும் அவை சார்ந்த பொருட்களின் விலை உயர்வுகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி தேவையான நடவடிக் கைகளை எடுக்காவிடில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்குவது பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும். பலசிறுதொழில் நிறுவனங்கள் நிலையற்ற சந்தை குறைந்து வரும் ஏற்றுமதி, ஆர்டர்கள் கேன்சல் ஆவது என்று பல துயரங்களைச் சந்தித்து வருகின்றன.

மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆலைகள்
25 முதல் 50 தொழிலா ளர்கள் வரை பணிபுரியும் சிறுதொழில் நிறுவனங்கள் கடுமையான மூலப்பொருள் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தங்கள் இயந்திரங்களை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அரசுக்கும், வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய தொகைகள், வாடகை போன்ற செலவினங்களை செலுத்த இயலாத நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்த கடுமையான விலை உயர்விலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்காக மூலப்பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சில ஆலோசனைகளை முன் வைக்கிறோம்:

ஏற்றுமதிக்கு தடை தேவை
உள்நாட்டு தேவை மற்றும் விலை உயர் வைக் கட்டுப்படுத்த மூலப் பொருள் ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். தயாரிப்புத் தொழில்களில் முதன் மையாகத் தேவையுள்ள மூலப் பொருட்களை இந்தியாவிற்கு வரி இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.

மூலப்பொருட்களின் அதிகபட்ச விலை குறைந்தது 6 மாதங்களுக்காவது, மாறாமல் இருக்கும் வகையில் அரசு வழிவகை செய்ய வேண்டும். பெரும் தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியில் 50% மூலப்பொருட்களை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிறுவனங் களுக்கு மூலப்பொருள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

தேசிய சிறுதொழில் நிறுவனம் பெருமளவு மூலப்பொருட்களை மொத்தமாக வாங்கி, ஒராண்டுக்கு குறிப்பிட்ட விலையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
செய்ல் திறப்பு எப்போது

கோவையில் உள்ள செய்ல் மூலப்பொருள் கிடங்கு 2015-ம் ஆண்டு இரயில்பாலம் கட்டுவதற்காக மூடப்பட்டு, 2017-ம் ஆண்டில் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்பும் திறக்கப்படவில்லை.

செய்ல் கிடங்கு மீண்டும் திறக்க ஆவன செய்ய வேண்டும்.
மாநில அரசு, அனைத்து மூலப்பொருட்களின் விலை மற்றும் இதர விபரங்கள் குறித்து ஆராய ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டும். இந்த கமிட்டியானது தங்களது அறிக்கையை முழு தரவுகளுடன் மத்திய அரசுக்கு உடனடியாக சமர்பிக்க வேண்டும்.

மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டி மாநில அரசு, பிரதமர், மத்திய நிதி அமைச்சர், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர், உருக்கு மற்றும் வணிகத் துறை அமைச்சர்கள் என அனைவரிடமும் எடுத்துரைத்து இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தா.மோ. அன்பரசன், டாக்டர் உமாநாத், அனு ஜார்ஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img