fbpx
Homeபிற செய்திகள்கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் 243 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.12.15 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள்...

கூட்டுப் பண்ணையத் திட்டத்தில் 243 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.12.15 கோடி மதிப்பில் வேளாண் கருவிகள் முதல்வருக்கு தருமபுரி மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி!

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் 243 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.12.15 கோடி மதிப்பில் வேளாண் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர், பவர் வீடர் போன்ற கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன், கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது இன்றைய தேவையாக உள்ளது.

வேளாண்மை, தொழில்துறையை வலுவூட்டி தொடர் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதுடன் மாநிலத்தின் சீரான பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

தமிழக அரசு, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழி வகுத்து வருகிறது. சத்துமிக்க பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து புத்துயிரூட்டும் வகையில் புதிய அணுகுமுறைகளை வகுத்து, நெல் இரகங்களை மீள சாகுபடிக்கு கொண்டு வந்து, நமது பாரம்பரிய இரகங்கள் காக்கப்படும்.

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு வேளாண் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.

வேளாண் பட்டதாரிகளை வேலை நாடுவோராக இல்லாமல் வேலை வழங்கும் தொழில்முனைவோராக உருவாக்கிட உரிய தொழில்முனைப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என பல்வேறு வேளாண் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரமானது விவசாய வளர்ச்சியினைப் பொறுத்தே அமைகிறது.

இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற முயற்சி
நவீன சாகுபடி முறைகளைப் பின்பற்றி உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற உத்திகளுடன் சந்தை சார் வாய்ப்புகளை ஏற்படுத்தி வேளாண்மையை ஒரு வணிகமாக, இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றமடையச் செய்து, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நவீன வேளாண் தொழில்நுட்ப முறைகளுடன், சாகுபடி பரப்பு, பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவதோடு, விவசாயிகளின் நலன் காப்பதையும் அரசின் முதன்மைக் கொள்கையாகக் கொண்டு வேளாண்மைத்துறை என்பது வேளாண்மை உழவர் நலத்துறை என முதல்வர் பெயர் மாற்றம் செய்தார். புதிய அணுகுமுறைகள் மூலம் சிறப்பான செயல்திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

வரலாற்றில் மணிமகுடம்
முதல்வரின் உன்னத நோக்கத்தின்படி, வேளாண்மையை வணிக ரீதியாகவும் மற்றும் இலாபகரமான தொழிலாகவும் மாற்றி, விவசாயிகளின் நலனை பேணிக் காத்து, மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடையச்செய்யும் வகையில், தமிழகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, விவசாயத்திற்கென ஒரு தனி நிதிநிலை அறிக்கை சிறப்பாக அமைந்திட வேண்டும் என்பதற்காக, விவசாயிகள், விவசாய சங்கங்கள், கல்வி நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அவர்களின் மேன்மையான கருத்துக்களை கேட்டறிந்து, ஒரு முழுமையான நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டது. இவ்வாறு உருவான வேளாண்மை நிதி நிலை அறிக்கை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் கடந்த 14.08.2021 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மூலம் தமிழகத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் காக்கும் வகையில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை, தமிழக வரலாற்றில் ஒரு மணிமகுடமாகும்.

விவசாயிகளின் நலன் காப்பதையே அரசின் முதன்மைக் கொள்கையாகக் கொண்டு வேளாண்மைத் துறை, “வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை” என முதலமைச்சரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், புதிய அணுகுமுறைகள் மூலம் சிறப்பான செயல் திட்டங்களை அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சாகுபடி பரப்பை உயர்த்த முடிவு
தமிழகத்தில் வேளாண்மையில் புத்தாக்கம் ஏற்படுத்தி நிலையான உயர் வளர்ச்சி அடைவதற்கு முதல்வர் ‘தமிழ்நாட்டில் கூடுதலாக 11.75 இலட்சம் எக்டர் பயிரிடச் செய்து, தற்போதுள்ள நிகர சாகுபடி பரப்பான 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படும்.

10 இலட்சம் எக்டர் அளவுக்கு உள்ள இருபோக சாகுபடி நிலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது, 20 இலட்சம் எக்டராக உயர்த்தப்படும்.

உணவுதானியங்கள் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் உற்பத்தித்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம் பிடிக்கும்’ ஆகிய முத்தான மூன்று பத்தாண்டு தொலைநோக்கு திட்டங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு வழங்கியுள்ளார்.

வேளாண்மைக்கான இடுபொருள் செலவைக் குறைத்து, அதிக மகசூல், அதிக உற்பத்தித் திறன் ஆகியவற்றை அடைவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விளைபொருட்களை மதிப்புக்கூட்டியும், நிலையான இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தும், வேளாண்மையை வணிக ரீதியிலான இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றுவதற்காக, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையம், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல், இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் நுண்ணீர்ப் பாசனத் திட்டம், உணவு பதப்படுத்துதலுக்கான தனி அமைப்பு, ஏற்றுமதி சேவை மையம் போன்ற பல்வேறு சிறப்புத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளதோடு அவற்றை முனைப்புடன் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் காய்கனிகளை நேரடியாக சந்தைப் படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு உயிரூட்டும் வகையில், அவற்றை மேம்படுத்துவதுடன், தேவையான இடங்களில் புதிய உழவர் சந்தைகளும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு தமிழக அரசு, பேரிடர் கால மேலாண்மை நுட்பங்கள் வழங்குவதுடன், இடுபொருள் மானியம் வழங்கியும், பருவகால மாற்றங்களை எதிர்கொண்டு அவர்களின் நலன் காக்கும் விதமாக பயிர்காப்பீட்டுத் திட்டத்தினை பகிர்மான இணைக் காப்பீட்டுத் திட்டமாக செயல்படுத்தியும் வருகிறது.

13 நிறுவனங்கள்
தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக இதுவரை 13 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

இந்நிறுவனத்தில் மொத்தம் 10309 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தில் உள்ள உறுப்பினர்களின் பங்குத்தொகை ரூ.108.09 இலட்சம் கொண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல், எண்ணெய் வித்துக்கள் மதிப்பு கூட்டுதல், புளி மதிப்பு கூட்டுதல், வேளாண் இடுபொருள் மையம், காய்கறிகள் கொள்முதல் மற்றும் விற்பனை.

தானியங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை, மாட்டுத் தீவனங்கள் கொள்முதல் மற்றும் விற்பனை, மலர்கள் விற்பனை நிலையம், விதை சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் மற்றும் தக்காளி மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக கூட்டுப்பண்ணையத் திட்டத்தில் 243 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.12.15 கோடி மதிப்பில் வேளாண் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர், பவர் வீடர் போன்ற கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 64 உழவர் உற்பத்தியாளர் குழுக்களைக் கொண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 9 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.1.55 கோடி மதிப்பில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தில் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ரூ.50 இலட்சம் மதிப்பில் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சான்று பெற்ற தரமான விதைகளாக உற்பத்தி செய்ய 2 விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.1.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.64 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

ஈடு இணையற்ற மாநிலமாக விளங்கும்
முதல்வரின் பத்தாண்டு தொலைநோக்கின் படி, கூடுதலாக பயிரிடுதல், பாசன சாகுபடிப் பரப்பினை உயர்த்துதல் ஆகிய சிறப்பு முயற்சிகளை செவ்வனே நிறைவேற்றிடவும், விவசாயத்தின் புதிய பரிமாணங்கள் குறித்த சிந்தனையுடன், மாநிலத்தின் விவசாயக் குடும்பங்கள், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் அனைவரின் வருமானம் பெருகி, ஒருங்கிணைந்த வளர்ச்சி அடைவதற்கான அத்துணை அம்சங்களையும் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டங்களின் மூலம் வேளாண்மையில் நிலையான வளர்ச்சி அடைந்து, நம் இன்பத் தமிழ்நாடு இந்தியாவின் ஈடு இணையற்ற மாநிலமாக விளங்கும் என்பது உறுதி.

எனவே தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வழங்கப்படுகின்ற அனைத்து திட்டங்களையும், நவீன தொழில் நுட்பங்களையும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் வேளாண் உற்பத்தியை பெருக்கி, வாழ்க்கை தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்வதோடு முதல்வருக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

உயர்ந்தது வாழ்வாதாரம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நெல்லிகனி கூட்டுபண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் பழனி தெரிவித்ததாவது:
1,000 உறுப்பினர்களை கொண்டு பதிவு செய்து ரூ.1000/-பங்கு தொகை பெற்று ரூ.10 இலட்சம் மதிப்பில் நிறுவனத்தின் பெயரில் சொந்தமாக நிலம் வாங்கி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனத்திற்கு ரூ.60 இலட்சம் மானியத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை வளர்ச்சி (MSDA) திட்டத்தில் மாட்டுத்தீவன ஆலை, எண்ணெய் மதிப்பு கூட்டு இயந்திரம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

வேளாண் வணிகத்துறையின் மூலம் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, தக்காளி விலை வீழ்ச்சி காலங்களில் தக்காளி மதிப்பு கூட்டி பியூரி, ஜாஸ், ஜாம் போன்ற பொருட்கள் தயார் செய்து நல்ல விலைக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இதுபோன்ற அரசின் மானிய திட்டங்களால் எங்களுடைய வாழ்வாதாரம் வெகுவாக உயர்ந்துள்ளது.

வேளாண்மை துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளதோடு தமிழக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையினை வழங்கியுள்ள முதல்வருக்கு, தருமபுரி மாவட்ட அனைத்து விவசாயிகளின் சார்பாகவும், எங்களது நெல்லிகனி கூட்டுபண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்களின் சார்பாகவும், நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறைந்த விலையில் கலப்பு தீவனம்
தருமபுரி வட்டம், பாலக்கோடு கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் இராஜா தெரிவித்ததாவது.

தருமபுரி வட்டம், வெள்ளாளபட்டி ஊராட்சியில் வசித்து வருகிறேன். காய்கறிகள் மற்றும் சிறுதானியங்கள் அதிகம் விளையக்கூடிய மாவட்டம் தருமபுரி மாவட்டம் ஆகும்.

காய்கறிகள் விற்பனை மேற்கொள்வதற்காக 20 உறுப்பினர்கள் கொண்ட ஆர்வலர் குழு அமைத்த பிறகு 100 உறுப்பினர்களை சேர்த்து பாலக்கோடு உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் (FPO) உருவாக்கி, ஒரு நபருக்கு ரூ.1000/- சேர்த்து ரூ.10 இலட்சம் நிதியினை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து ரூ.8 இலட்சம் மதிப்பில் சிறுதானியங்களை கொள்முதல் செய்து மதிப்பு கூட்டு பொருளாக மாற்றம் செய்தும், பாரம்பரிய நெல்லை வாங்கி, அரிசியாக எங்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்தும் வருகிறோம்.

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகள் அதிகமாக உள்ளன. இதற்கு தேவையான கால்நடை கலப்பு தீவனமும் தயார் செய்து குறைந்த விலையில் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்.

இதுவரை சுமார் ரூ.41 இலட்சம் விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.1 இலட்சத்திற்கு மேல் இலாபம் கிடைத்துள்ளது.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தருமபுரி மாவட்டத்தில் தனி இயற்கை வேளாண்மை உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் (FPO) தொடங்குவதாக அறிவித்தமைக்கு முதல்வருக்கு தருமபுரி மாவட்ட விவசாயிகள் சார்பாகவும், பாலக்கோடு கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு
மு.அண்ணாதுரை,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தருமபுரி மாவட்டம்.
மற்றும் த. வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
தருமபுரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img