கருமத்தம்பட்டியில் ரூ.3.50 கோடி செலவில்- புதிய நகராட்சி அலுவலக கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பணியை பூமி பூஜை போட்டு திமுக நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் கருமத்தம்பட்டி நகராட்சியும் ஒன்று. பழைய பேரூராட்சி கட்டிடத்தில் தற்போது நகராட்சி நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைய பேரூராட்சி கட்டிடத்தில் நகராட்சி நிர்வாகம் செயல்பட போதுமான இடவசதி இல்லாததால் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான திட்டம் போடப்பட்டு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி நிதியும், நகராட்சி நிர்வாக நிதியில் இருந்து ரூ.1.50 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக கருமத்தம்பட்டி நான்கு ரோடு அருகில் உள்ள அரசு திருமண மண்டபத்தின் வளாகத்தில் நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது.
பணிகளை நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் தொடங்கி வைத்தார். மற்றும் நகராட்சித் துணைத்தலைவர் யுவராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



