உலக அளவில் பாரம்பரியமிக்க தொன்மையான சமூகம் தமிழ் சமூகம். உலக மரபு நாள் முன்னிட்டு கோவை பந்தைய சாலை பகுதியில், யாக்கை மரபு அரக்கட்டளை சார்பாக, உலக மரபு நாள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சார்பு நீதிமன்றங்களின் அரசு கூடுதல் வழக்கறிஞர் பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.
மரபை காப்பது, பண்பாட்டை போற்றுவது, வரலாற்றை மீட்பது உள்ளிட்டவற்றின் சாரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி 6 கல்லூரிகளை சார்ந்த மாணவ, மாணவியர் பேரணியாக சென்று மரபு சார்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை பந்தைய சாலை முகப்பு பகுதியில் ஆரம்பித்த இந்த பேரணி, மீடியா டவர் வழியாக சென்று மீண்டும் அதே இடத்தில் வந்தடைந்தது.
இதுகுறித்து சிறப்பு அழைப்பாளரான அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞரும், யாக்கை உறுப்பினருமான பி.கிருஷ்ண மூர்த்தி பேசும்போது, உலகில் தொன்மையாம நாகரீகம் கொண்டது தமிழ் சமூகம். முன்னோர்களின் பண்டைய கால வாழ்வியல், வாழ்கை நெறிகள் உள்ளிட்டவை கல்வெட்டுகள் செப்பேடுகள் சிற்பங்கள் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றிருக்கின்றன.
இதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வது அவசியம். அதன் அடிப்படையில், பழங்கால அடையாளங்களை பத்திரப்படுத்தி பாதுகாத்து, அதன் பெருமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல, யாக்கை பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல கோடி ரூபாய் ஒதுக்கி மரபு சின்னங்களை பாதுகாக்க வழிவகை செய்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம் என தெரிவித்தார்.



