தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான “வைக்கம் விருது” தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேன்மொழி சௌந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன் இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் ஆவார்.
கட்டமைப்பு சாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், உலக அளவிலும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸின் நிறுவனர் / நிர்வாக இயக்குநர் ஆவார். இந்த அமைப்பின் மூலமே தனது சமூகநீதிப் பணிக்கான களம் அமைத்து துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்.
தேன்மொழி சௌந்தரராஜன், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிரான பணிகளால் அனைவராலும் அறியப்படுகிறார். சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்படுவதை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் எழுத்தாளராகவும் மிளிர்கிறார். உலகளவில் விருதுகளையும் பெற்றுள்ளார்.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சரிடம் இருந்து இந்த விருதை தேன்மொழி சௌந்தரராஜன் பெற்றுக் கொள்வார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கு சமூக நீதிக்காக பாடுபடும் தமிழர்கள் இருந்தாலும் அவர்களை இனம்கண்டு கௌரவிப்பதில் பெருமிதமும் ஆனந்தமும் கொள்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
தேன்மொழி சௌந்தரராஜனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் அவருக்கு வைக்கம் விருது வழங்குவது சாலப்பொருந்தும். அவரது சமூக நற்பணி தொடரட்டும்; வாழ்த்துகள்!



