கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்களம், புஞ்சை கடம்பன்குறிச்சி, நன்னியூர், வாங்கல் குப்புச்சிபாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் 20 இடங்களில் 4.21 கோடி மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், சமுதாய கூடம் கட்டுதல், நாடக மேடை அமைத்தல், கழிவு நீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான துவக்க நிகழ்ச்சி மற்றும் பகுதி நேர நியாயவிலை கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
ஆத்தூர் நத்தமேடு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார். குடும்ப அட்டை தாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். அதனை தொடர்ந்து அதே ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் தார் சாலை மேம்படுத்துதல் பணியினை துவக்கி வைத்தார்.
அப்போது அப்பகுதி கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி இல்லை என்றும், காலை, மாலை மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், வேலைக்கு செல்வபவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக இருவேளை பேருந்து வர ஏற்பாடு செய்வதாக கூறிச் சென்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் எம் எல் ஏக்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



