மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் எராளமானோர் தற்கொலை செய்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பது அம்பலமாகி உள்ளது.
இந்த நிலையில், தேர்வு மையத்தில் 8 மாணவர்கள் முதலிடம் பிடித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தாக்கலாகி உள்ளது.
மாநில உரிமைகளை பறித்து நீட் தேர்வை திணித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிதோண்டிய பா.ஜ.க. தான் இத்தகைய முறைகேடுகளுக்கும் பொறுப்பாகும். எனவே, முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
சமூக நீதிக்கு எதிரான ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ள நீட்தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்பதே தமிழ்நாடு மட்டுமல்லா பிற மாநிலங்களிலும் கோரிக்கை விஸ்வரூம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்யும் காலம் விரைவில் வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த நாள் மிக விரைவில் வரட்டும்!