fbpx
Homeதலையங்கம்நீட் குளறுபடிகள் - மீளுமா தேசிய தேர்வு ஆணையம்?

நீட் குளறுபடிகள் – மீளுமா தேசிய தேர்வு ஆணையம்?

நம் நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை பிரிவில் மருத்துவ படிப்புக்கு படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தான் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடந்தது.

இந்த தேர்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது, 1,500க்கும் அதிகமானவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியது உள்ளிட்ட பல விஷயங்கள் சர்ச்சையை கிளப்பின.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்து புதிய தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே இளநிலை நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, நாடு முழுவதும் முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்வு திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே முறைகேடு விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் சிங் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இது முறைகேடுகளை உறுதிப்படுத்துகிறது என்றே விமர்சிக்கப்படுகிறது.

முறைகேடுகளுக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் மாணவர்களுக்கு நேர்ந்துள்ள மன உளைச்சலுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

அரசியல் ரீதியாக இக்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளன.

ஆக, தேசிய தேர்வு முகமை குளறுபடிகளில் இருந்து மீள முடியாமல் தத்தளிக்கிறது. வினாத்தாள் கசிவு மற்றும் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்து விட்டது.

இனியாவது தேர்வு முறைகேடுகளுக்கும் மாணவர்களின் மன உளைச்சல்களுக்கும் முடிவு கட்டப்படுமா? குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தேசிய தேர்வு முகமை எப்போது மீளும்?
பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img