fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 1,38,346 மாணவர்கள் பயன்

கரூர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 1,38,346 மாணவர்கள் பயன்

தமிழ்நாடு முதலமைச்சர் கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதன் மூலம் குடியிருப்பு அடிப்படையில் மாணவ, மாணவியர்களை அவர்கள் வசிப்பிடம் அருகே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் “இல்லம் தேடி கல்வி” திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கல்வியின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள “இல்லம் தேடி கல்வி” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகின்றது.

குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் 100 சதவிகித கல்வியை வழங்கிடவும், பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவித்திடவும் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் “இல்லம் தேடி கல்வித் திட்டம்” கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கரூர் நகர்புறத்தில் என மொத்தம் 387 இடங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்டத்தில் தற்போது இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் 4,925 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, 387 தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்றல் பயிற்சிகள் வழங்கப்படுவதன் வாயிலாக தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் தங்களிடம் கல்வி கற்க வருகை தரும் மாணவ, மாணவியர்களின் அடிப்படைத் திறன்கள் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மேலும், இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் மதிப்பீடு குறிப்பிட்ட கால அளவில் ஆய்வு செய்யப்படுகிறது.

மாணாக்கர்களின் கற்றல் மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு தன்னார்வலர்களின் கற்பிக்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


தற்பொழுது இத்திட்டம் தினசரி மாலை 5 முதல் 7 மணி வரை தன்னார்வலர்களைக் கொண்டு மாணவ, மாணவியர்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கிடுவதன் மூலம் மாணவ, மாணவியர்களின் இடைநிற்றல் குறைக்கப்பட்டு, கற்றல் திறன் மேம்பாடு அடைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை மாணவ, மாணவியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர், இனுங்கூர் பகுதியில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தில் பயின்று வரும் சுருதிகா தாயார் சரிதா கூறியதாவது:

எனது பெயர் சரிதா. எங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே குறிக்கோளாக எப்போதும் இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் “இல்லம் தேடி கல்வி” என்னும் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் எங்களது வீடுகளுக்கு அருகிலேயே தன்னார்வலர்களைக் கொண்டு குழந்தைகளுக்கு ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுடன் பாடங்களை கற்றுத் தருகின்றனர். கடந்த 4 வருடங்களாக இந்த இல்லம் தேடி கல்வி மையத்திற்கு ஆர்வத்துடன் சென்று எனது மகன் கல்வி பயின்று வருகிறார்.

இத்திட்டத்தினால் எனது மகனின் கற்றல் திறன் அதிகரித்து வருகிறது என்பதை என்னால் காண முடிகிறது.


அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களைப் போன்ற பெற்றோர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கரூர், பாலவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் பிரசன்னா தற்போது அருகிலுள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் பயின்று வருவது குறித்து கூறியதாவது:

நான் படித்து அரசுப் பணியில் உயர் பதவியில் பலருக்கும் நன்மை செய்யும் வகையில் பணியாற்றிட வேண்டுமென இப்போதிலிருந்தே பல உயர்ந்த குறிக்கோள்களுடன் படித்து வருகிறேன்.


தமிழ்நாடு முதலமைச்சர் எங்கள் வீட்டின் அருகாமையிலேயே மாலை நேரங்களில் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வழிவகை செய்து கொடுத்தார்கள். இதன் மூலம் கடந்த நான்காண்டுகளாக மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் அருகிலுள்ள இல்லம் தேடி கல்வி மையத்திற்குச் சென்று பயின்று வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img