கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கோவை மாநகர காவல் இணைந்து நடத்திய இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இதில் எஸ்.என்.ஆர். சன்ஸ். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஸ்ரீ ராம கிருஷ்ணா கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்று பேசினார்.
இதில் கோவை மாநகரக்காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “இணையப்பாதுகாப்பு” இதழை வெளியிட்டு பேசியதாவது: கடந்த 2022-ம் ஆண்டில் இணைய மோசடியில் ரூ.3 கோடியும், 2023-ம் ஆண்டில் ரூ.45 கோடியும், 2024-ம் ஆண்டில் ரூ.97 கோடியும் பொதுமக்கள் இழந்துள்ளனர். இதைப்பற்றி நாம் இன்று விவாதிக்க வேண்டியுள்ளது.
கண்டறிய முடியாத இணையதளங்கள் மூலமாக மோசடிகள் பெருகி வருகின்றன. இதிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, கல்லூரி மாணவர்கள் காவல் துறையுடன் இணைந்து செயல்பட முன் வர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
அதை தொடர்ந்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அருண் இணைய பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
பின்னர் இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.முடிவில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.