கோவை சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தரின் ஆன்மீக மற்றும் பேராயராக அவரது பயணம் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் அனைத்து மதத் தலைவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.
கோவை தென்னிந்திய திருச்சபைகளின் கோவை மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தர் அவரது ஆன்மீக பயணத்தில் பேராயராக அவரது ஊழியம் குறித்த அனுபவங்களை கூறும் விதமாக, பிரசாந்த் அப்புசாமி, எத்திக்கல் லீடர்ஷிப் இன் தி காரிடோர்ஸ் ஆஃப் ஃபெய்த்’ (ETHICAL LEADERSHIP IN THE CORRIDORS OF FAITH) எனும் புத்தகத்தை எழுதி உள்ளார்.
இந்நிலையில் இதற்கான வெளியீட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
விழாவில் ,பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் புத்தகத்தை வெளியிட அதன் முதல் பிரதிகளை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.ஆர்.பஷீர் அகமது, குருத்வாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங்,
தாவூதி போரா அஞ்சுமன் இ-புர்ஹானி தலைவர் ஜனாப் ஷேக் மொயிஸ் கத்தவாலா என அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தை பெற்று கொண்டனர். ஆயர் திமோத்தி ரவீந்தரின் ஆன்மீக சாதனையை பாராட்டி அவர்கள் புகழாரம் சூட்டினர்.
விழாவில் கோவை சிஎஸ்ஐ திருமண்டல துணைத் தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ், கோவை திருமண்டல செயலாளர் ஆயர் பிரின்ஸ் கால்வின், மற்றும் பொருளாளர் டி. எஸ்.அமிர்தம் மற்றும் பேராயரம்மா ஆனி ஹேமலதா ரவீந்தர், சீனிவாசன், ஆடம் அப்பாதுரை, குளோரி லதா, ஜெமிமா வின்ஸ்டென்ட், டாக்டர் அருமை ராஜ் உட்பட சி.எஸ்.ஐ. ஆலய ஆயர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ பிஷப் திமோத்தி ரவீந்தர் பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நன்மையை செய்கிறவர்களாக மற்றவர்களுக்கு உதவி செய்கிற அந்த ஒரு உன்னதமான அழைப்பைப் பெற்றவர்களாக இருப்பதாக கூறினார். அந்த நல் ஒளியை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறும் வகையிலே அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு நாம் அனைவரும் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தம்முடைய இந்த ஆன்மீக பயணத்தில் உடனிருந்த சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் தமது மனமார்ந்த் நன்றிகளை உரித்தாக்குவதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, புத்தகம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், எளிமையாகத் துவங்கி தனது மண்ணுக்கும் மக்களுக்குமான சிறந்த பார்வை வழங்கும் ஒரு தலைவரது தீர்க்கமான மற்றும் சுருக்கமான விவரிப்பாக இந்த புத்தகம் இருப்பதாகவும், தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டல பேராயராக .திமோத்தி ரவீந்தரின் தனிப்பட்ட, ஆன்மீக மற்றும் அவரது பயணத்தின் எண்ண ஒட்டங்களை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இப்புத்தகத்தின் முன்னுரையை ஜெர்மனி பேட்டன் நகர் பிரோட்டஸ்டன்ட் தேவாலயத்தின் ஆயர் பேராசிரியர் டாக்டர் ஹைக் ஸ்பிரிங்ஹார்ட் வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.