கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார்.
அவரது பரிந்துரைகள்: அரசு பள்ளிகளின் பெயர்களில் எந்த சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது. ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதி அடையாளமும் இருக்க கூடாது. இதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்க கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் அதே சமூகத்தினரை சேர்ந்தவரை தலைமையாசிரியராக நியமனம் செய்யக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும்.
கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தின் முன் சாதி பேதம் கிடையாது; அனைவரும் சமம் தான். சாதிய வேறுபாடுகளை அறவே களைந்து விட வேன்டும் என்பது உடனே நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல. அதே நேரத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது பள்ளி மாணவர்கள் இடையே எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தார். அதே போன்ற, விழிப்புணர்வோடு கூடிய ஆரம்பகட்ட சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற் கொள்வதற்கான பரிந்துரைகளைத் தான் நீதியரசர் கே.சந்துரு தந்துள்ளார். முயற்சி திருவினை ஆக்கும் என்பதற்கிணங்க, பரிந்துரைகளை ஆழமாகப்பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானதமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.
கல்வி நிறுவனங்களில் சாதி அறவே ஒழியட்டும்!