Homeபிற செய்திகள்மணலில் தேசபக்தி சிற்பம் செதுக்கி மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன்

மணலில் தேசபக்தி சிற்பம் செதுக்கி மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஷாம். இம்மாணவனுக்கு, அதே பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் சு.செல்வம் மணல் சிற்பக் கலைக்கான சிறப்புப் பயிற்சியை அளித்தார்.
இப்பயிற்சியின் பயனாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா மணல் சிற்பப் போட்டியில் “இளையோர் திறன்” என்ற தலைப்பில் பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து நிலைகளிலும் அம்மாணவன் முதலிடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்டம் அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா மணல் சிற்பப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். இப்போட்டியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவன் ஷாம், “வல்லரசு இந்தியாவைச் செதுக்கும் மாணவன்” என்ற கருப்பொருளை மணலில் தத்ரூபமாகச் செதுக்கி, மாநில அளவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார். இம்மாணவன் பிரபல பகுதிநேர ஓவிய ஆசிரியர் சு.செல்வத்தின் சீரிய வழிகாட்டுதலில் உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணல் சிற்பப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஷாம், மாணவர்க்கும் சிறந்த முறையில் மணல் சிற்பப் பயிற்சியளித்த ஓவிய ஆசிரியர் சு.செல்வம் ஆகியோரை வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பள்ளித் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் நேரில் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதன் மூலம் திருக்கோவிலூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் மாணவன் ஷாம்.

படிக்க வேண்டும்

spot_img