Homeபிற செய்திகள்கோவை மாவட்டம் முழுவதும் அடகுக்கடை - நகைக்கடை உரிமையாளர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

கோவை மாவட்டம் முழுவதும் அடகுக்கடை – நகைக்கடை உரிமையாளர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுப்பதுடன், அடகுக்கடைகள் மற்றும் நகைக்கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி, உத்தரவின்பேரில், நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் அடகுக்கடை மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
அந்தந்த உட்கோட்டதுணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடகுக்கடை மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், வணிகர்கள்கலந்து கொண்டனர். இக்கூட்டங்களில், திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குறிப்பாக, கடைகளின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தரமான சிசிடிவி கேமராக்களை பொருத்தி, அவை தொடர்ந்து செயல்படுவதையும், பதிவுகள் முறையாகச் சேமிக்கப்படுவதையும் உறுதி செய்தல்,இரவு நேரப் பாதுகாவலர்களை நியமித்தல் எச்சரிக்கை அலாரம், உறுதியான பூட்டுகள், பாதுகாப்புக் கதவுகள் மற்றும் லாக்கர் வசதிகளை ஏற்படுத்துதல், போதிய மின்விளக்குகளைப் பொருத்துதல் ஆகியவற்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடைகளுக்கு வரும் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணித்தல், ஊழியர்களின் அடையாள விவரங்களைச் சரிபார்த்தல், அடகு வைக்கப்படும் மற்றும் விற்பனைக்கு வரும் பழைய நகைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களின் அடையாள விவரங்கள், உரிய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனைப் பதிவுகளை முறையாகப் பராமரித்தல், ஆகியவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. திருட்டு நகைகள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்கள் கொண்டுவரப்பட்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல், கடைகளைத் திறக்கும் மற்றும் மூடும் நேரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுதல், அதிக மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் குறித்த தகவல்களை உடனடியாகஅரு கிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவித்தல் ஆகிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அவசர காலங்களில் காவல்துறையின் 100 மற்றும் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையுடன் முழு ஒத்துழைப்பு வழங்கவும் வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img