Homeபிற செய்திகள்கோவை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பிரம்மாண்ட அசனப் பண்டிகை 40,000 பேருக்கு கறி விருந்து

கோவை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் பிரம்மாண்ட அசனப் பண்டிகை 40,000 பேருக்கு கறி விருந்து

கோவை திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை எதிர்புறம் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் 28வது பிரதிஷ்டை ஆராதனை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் பிரதிஷ்டை பண்டிகை மற்றும் ஆராதனையும் காலை 8-.30 மணிக்கு அசனப் பண்டிகை சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. சிறப்பு செய்தியாளராக டிவிஎஸ் -நகர் திருச்சபையின் ஆயர் தலைவர் ராஜசேகர் ஆயர் கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அசனப் பண்டிகை விருந்து தொடங்கியது. மாலை 5.30 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 1200 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு வாழை இலையில் சாதம், அவியல், கறி குழம்பு, சாம்பார், ரசம், பாயசம், உள்ளிட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

உணவு பரிமாறுவதற்கு தன்னார்வலர்களும், சமையல் கலை ஊழியர்களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

உணவு தயாரிப்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரத்தில் இருந்து பிரபல சமையல்கலை வல்லுநர் கோயில் பிச்சை தலைமையில் 200 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்த விருந்தில் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் திரளாக கலந்து கொண்டு உணவு சாப்பிட்டார்கள். ஆலயத்திற்கு வர இயலாத 2200 பேருக்கு டோக்கன் முறையில் கேரியர்களில் உணவு விநியோகிக்கப்பட்டது. கோவையில் உள்ள 32 முதியோர் இல்லங்களுக்கும் உணவு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் கேரியர் டோக்கன் வாங்கதவர்கள் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அவர்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் உணவு வழங்கப்பட்டது. ஒரே நாளில் மொத்தம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதையொட்டி அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஆலயத்துக்கு வருபவர்கள் தங்கள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு அருகில் உள்ள பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் எந்த வித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் ஆயர் தலைவர் டி.கே.ஸ்டீபன் ராஜ் எபினேசர், ஆயர் எஸ்.சாந்தகுமார், ஆயர் எம்.ஆபிரகாம், ஆலய செயலர் ஜெ.ஏ.பரமானந்தம், ஆலய பொருளாளர் ஏ.அருண் ஆனந்தராஜ், அசன கன்வினர் ஜி. ஆல்வின், ஆடம் அப்பாதுரை, காட்வின் கோவில், ஜேக்கப் ஜான் சாமுவேல், பிரசாந்த், ஜெபகிங், ஜெபஸ்டின், பெனிட்டா மிஸ்பா ஹெரால்டு, ஜான் தாமஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஆலய அசன பண்டிகைக்கு பணமாகவும் பொருளாகவும் கொடுத்து உதவிய அனைவருக்கும் திருச்சபை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img