Homeபிற செய்திகள்தலைமுடி கொட்டுகிறதா…?கறுகறுவென அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

தலைமுடி கொட்டுகிறதா…?கறுகறுவென அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

எத்தனையோ நாடுகள் சென்றாலும், விதவிதமான பெண்களை பார்த்தாலும், எங்கும் காணக்கிடைக்காத நிறைவான கூந்தலை உடைய பெண்களை தென்னிந்தியாவில்தான் பார்க்க முடியும்! கூந்தலுக்கு நமது பெண்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், ஆசைப்பட்ட எல்லா பெண்களுக்கும் நிறைவான, அடர்த்தியான, கறுப்பான, சில்க்கியான கூந்தல் அமைந்துவிடுவதில்லை.
பலருக்கும் முடி கொட்டுகிறதே…என்பது தான் தீர்க்கமுடியாத கவலை. சரி,முடி உதிர்வதற்கு என்ன காரணம்?

மருந்து, மனது, ஆரோக்கியம், உணவு போன்று பல காரணங்கள் இருக்கின்றன. வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், இரும்பு, புரோட்டின் போன்ற சத்துகள் போதுமான அளவு இல்லாவிட்டால் முடி உதிரும். ஆன்டி பங்கல் மருந்துகள், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள், இன்னும் சில நோய்களுக்காக சாப்பிடப்படும் மாத்திரைகளாலும் முடி உதிரும்.மன அழுத்தம் இருந்தாலும், சரியான ஓய்வு,-தூக்கம் இல்லாவிட்டாலும் முடி உதிரும்.
முடி உதிர்கிறதென்றால் வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு,வெண்ணெய், கீரை வகைகள், மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை உணவில் சேர்க்கவேண்டும். அதே நேரத்தில் முடி நன்றாக வளர சல்பர் சத்தும் அவசியம்.மீன், முட்டை மஞ்சள்கரு, கோதுமை, பயறு வகைகள்… ஆகியவற்றை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் உணவில் கவனம் செலுத்தினாலும், முடி அதிகமாக உதிரும்போது அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கவேண்டும். சத்து குறைபாடு என்று கண்டறிந்தால் மல்டி வைட்டமின் சத்துகள் அடங்கிய மாத்திரைகளையும் சாப்பிடவேண்டும். முடி வளர துணைபுரியும் ஆங்கில மருந்துகள்(ஹேர் ஸ்டிமுலன்ட்) உள்ளன. இதை சாப்பிட்டால் உதிர்ந்த முடிக்கு பதில் புதிய முடிகள் துளிர்க்கும். சிலருக்கு வழுக்கை போன்று நெற்றி ஏறிக்கொண்டே செல்லும், அதற்குரிய மருந்துகளை அவர்கள் சாப்பிடலாம். ஆனால், மருந்து சாப்பிடுவதை நிறுத்தியதும் மீண்டும் முடி உதிரத் தொடங்கலாம். இத்தகைய மருந்துகளை டாக்டரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சாப்பிடவேண்டும்.
தலையில் பொடுகு அதிகரித்தால் முடி கொட்டுவது அதிகரிக்கும். பொடுகை கட்டுப்படுத்துவதும் முக்கியம்.

முடி உடைந்து போதல், இறுதிப்பகுதி பிளவுபடுதல் போன்றவைகளுக்கு சத்து குறைபாடுகளும், பராமரிப்பு குறைபாடுகளும் காரணமாக இருக்கின்றன. சரியான காரணத்தை கண்டறிந்து மல்டி வைட்டமின் சத்து மாத்திரைகளை சாப்பிடவேண்டும். குளித்துவிட்டு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக நேரம் தலையை துவட்டக் கூடாது. நனைந்த கூந்தலை சீவவும் கூடாது. முடிக்கு பொருந்தாத வீரியமுள்ள ஷாம்புகளை பயன்படுத்தினாலும் முடி உடைந்து, பிளக்கும்.
நரை உருவாக பாரம்பரியம்,மன அழுத்தம், சமச்சீரான சத்துணவு இல்லாமை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முடிக்கு கருமையான நிறத்தை தருவதற்கான ஆங்கில மருந்துகள் உள்ளன. இதனை பூசினால், ‘மெலனோசைட்’ எனப்படும் செல்கள் வளர்ந்து, கூந்தலுக்கு கறுப்பு நிறம் தரும்.

கூந்தல் வறட்சி பலரையும் பாதிக்கும் பிரச்னை. ரசாயனம் அடங்கிய பொருட்களை அதிகமாக பயன்படுத்தினாலும்,பிரச்னைக்குரிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் கூந்தல் வறண்டுபோகும். அதிகமாக வறண்டுபோகும் முடிகள்,சுற்றுப்புற சூழலில் இருந்து ஈரத்தன்மையை உறிஞ்ச முயற்சிக்கும்.இந்த முயற்சி முடிக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கும்.
தினமும் தலைக்குக் குளிப்பதனால்தான் முடி கொட்டுகிறது என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தலைக்கு குளிக்காமல் இருப்பது தவறு. ஐரோப்பாவில் உள்ளவர்கள் வாரத்துக்கு 3 முறை தலைக்குக் குளிக்கிறார்கள்.
80 சதவீத அமெரிக்கர்களும், 90 சதவீத ஜப்பானியர்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை தலைக்குக் குளிக்கிறார்கள். உலகில் கால் பங்கு மக்கள்தான் தினமும் தலைக்குக் குளிக்கிறார்கள். அதில் நம்மையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான்.

நாம் அடிக்கடி முடி வெட்டிக் கொண்டால், (மொட்டை போட்டால்) முடி வேகமாக வளரும் என்ற எண்ணம் பரவலாக தமிழ் நாட்டில் உள்ளது. இந்த நம்பிக்கை தவறானது. தோலுக்கு உள்ளே இருக்கும் முடியின் வேருக்கு உயிர் உண்டு. முடியின் வேர் அதாவது மயிர்க்கால்கள் (Hair Follicle) இருக்கக்கூடிய இடத்தில் ரத்த ஓட்டம் உண்டு. இந்த மயிர்க்கால்கள் இருக்கக்கூடிய நுண்ணறைகளுக்கு ரத்த சப்ளை நன்றாக கிடைத்தால்தான், முடி நன்கு வளரும். முடி நிறையவும் வளரும்.
ஒரு முடி பிடுங்கப்பட்டுவிட்டால்,அந்த பள்ளத்தில், அந்த வேரடியில்,அந்த மயிர்க் கால்கள் இருந்த இடத்தில், அடுத்த முடிவளர ஆரம்பித்துவிடும். லட்சக்கணக்கான மயிர்க் கால்கள் தலையில் மட்டும் இருக்கின்றன. இருந்தாலும், ஒவ்வொரு முடியும் தனித்தனியாக செயல் படக்கூடியவை. மயிர்க் கால்கள், நுண்ணறை மொத்தமும் நாம் கருவிலிருக்கும் ஐந்தாவது மாதத்திலேயே உருவாகிவிடுகிறது.
இப்போது எல்லோருமே எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிறார்கள். டென்ஷன் ஆகும்போது, அய்யோ, தலையை பிய்ச்சிக்கிற மாதிரி இருக்கே!, என்று தலையில்தான் கையை வைக்கிறார்கள். எனவே எல்லா டென்ஷனும் தலையில்தான் வந்து முடிகிறது.

முடியை பாதுகாக்க நினைப்பவர்கள், முதலில் போதுமான புரதச்சத்து… உடலுக்கும், முடிக்கும் சரிவர தினமும் கிடைக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.புரத மயிரிழை (Protein Filament) என்று தான் முடியைச் சொல்வோம். எனவே புரதச்சத்துதான் முடிக்கு மிக மிகத் தேவையான உணவு.
எள் விதை தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது. எள் விதையில் மெக்னீசியமும், கால்சியமும் அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு தாதுப்பொருட்களும் முடி வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமானவை. அதோடு முடி இழப்பையும் தடுக்கும் .தினமும் காலையில் கொஞ்சம் எள் சாப்பிட்டால் போதும்.
தனியாக எள்ளை சாப்பிட முடியாது. எனவே எள்ளுப்பொடி ,எள் உருண்டை, எள்ளு மிட்டாய் போன்றவைகளாக தயாரித்து சாப்பிடுங்கள். ஒரு கப் தேங்காய்ப் பாலை பிழிந்தெடுத்து, அத்துடன் வேறு எதையும் சேர்க்காமல், காலையில் குளிப்பதற்கு முன்பு பிரஷ்ஷை வைத்து தலை முழுக்க நன்கு குளிர தடவி விடுங்கள். பின்னர் ஒரு துண்டை வைத்து தலையைச் சுற்றி கட்டிக்கொண்டு, 20 நிமிடம் உட்கார்ந்திருங்கள். அடுத்து தலைக்கு குளியுங்கள். இப்படி வாரத்துக்கொரு முறை செய்து பாருங்கள்.
முடி இழப்பு தவிர்க்கப்படும். தேங்காய்ப்பாலில் வைட்டமின் ஈ சத்தும்,கொழுப்பும் அதிகமாக இருக்கிறது. பொட்டாசியமும் நிறைய உள்ளது.
இவையெல்லாமே முடியை வறண்டு போகவிடாமல் பாதுகாக்கவும்,முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தைக் கொடுக்கவும் செய்கின்றன.
சுமார் 15 வேப்பிலைகளை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்.தண்ணீர் பாதியாக வற்றி நன்கு சுண்டிய பிறகு இறக்கி ஆற வையுங்கள்.அந்த நீரை கண்களில் படாமல் தலையில் மட்டும் தடவி, முடியை நன்றாக அலசுங்கள்.சிறிது நேரம் கழித்து தலைக்கு நன்றாக குளித்துவிடுங்கள். வாரத்துக்கொருமுறை இதை செய்யலாம். வேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்புச் சக்தி நிறையவே இருக்கிறது. இதனால் தலையில் ஏற்படும் பொடுகு, பேன்,சிறிய சிறிய கட்டிகள்,தோல் வியாதி போன்றவை ஏற்படாது.இதன் மூலம் முடி பாதுகாக்கப்படும். முடி வளர்ச்சியும் உருவாகும்.
நாலைந்து நெல்லிக்காயை எடுத்து,ஒரு சிறிய கப் தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும் வரை கொதிக்கவிட்டு, பின்பு இறக்கி ஆறவையுங்கள். நன்றாக ஆறிய பின்பு தலையில் மயிர்க்கால்களில் படுகிற மாதிரி தேய்த்து, சுமார் 20 நிமிடம் ஊறவிடுங்கள். அதற்குப் பிறகு தலைக்கு நன்றாக குளியுங்கள். வாரத்திற்கு இருமுறை இதை காலையில் செய்யுங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு துணைபுரியும். இருக்கிற முடியையும் பலப்படுத்தும். தினசரி நெல்லிக்காயை உணவாகவும் சாப்பிட்டு வரலாம்.இதில் ஏராளமான சத்துகள் உள்ளன‌. முடிக்கு மட்டுமல்ல தோலும் பளபளப்பாக இருக்கும். இளமையான தோற்றம் ஏற்படும்.

ஒரு கப் தண்ணீரில் ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் ஊறப்போடுங்கள். மறுநாள் காலையில் ஊறிய வெந்தயத்தை நன்கு மையாக அரைத்து பேஸ்ட்போல் ஆக்கி வைத்துக்கொள்ளுங்கள்.தலை முழுக்க இந்த வெந்தய பேஸ்ட்டை தேய்த்து சுமார் 20 நிமிடம் ஊறவிடுங்கள். அதற்குப் பிறகு தலைக்கு நன்றாக குளித்துவிடுங்கள். காலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுமார் ஒரு மாதம் செய்து பாருங்கள். வெந்தயம் முடி வளர்ச்சியை அதிகமாக்கும்.முடி பளபளப்பாக, உறுதியாக, நீளமாக வளர வெந்தயம் உதவும்.
தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, உடல் முழுக்க வியர்வை வெளிவரும். அவ்வாறு ஏற்படும்போது தலையிலும் வியர்வை வெளிவரும். தலை முழுக்க வியர்வை வெளிவரும்போது மயிர்க்கால்களை அடைத்துக்கொண்டிருக்கும் அழுக்கும் வெளிவந்து தலையும், முடியும் சுத்தமாகிவிடும். இதனால் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி ஆறவைத்து, தலையில் தேவைக்கு தேயுங்கள். மயிர்க்கால்களில் எண்ணெய் போய்ச் சேரும்படி கைவிரல்களை தலைமுடிக்கு உள்ளே விட்டு நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். தேங்காய் எண்ணெய்யில் ஆன்டிஆக்சிடென்ட் நிறைய இருக்கின்றன. இவை முடியை உறுதியாக்கும். தோல் நோய்களை ஓரளவு கட்டுப்படுத்தி, சருமத்திற்கு பளபளப்பையும் தரும்.மன அழுத்தத்தை குறைப்பதற்காக யோகா,தியானம் போன்றவைகளை செய்துவர வேண்டும்.இதனால் முடி ஆரோக்கியம் மட்டுமல்ல, முழுமையான உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். தினமும் வாக்கிங் செல்லுங்கள். நீச்சல் அடியுங்கள். சைக்கிள் ஓட்டுங்கள். டென்னிஸ் விளையாடுங்கள். கிரிக்கெட் விளையாடுங்கள். உங்களுக்கு பிடித்த விளையாட்டை தினமும் விளையாடுங்கள்.

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கில் ஈடுபடவும் தினமும் நேரம் ஒதுங்குங்கள். அது பாட்டு கேட்பது, தோட்டத்தை பராமரிப்பது, வளர்ப்பு பிராணிகளோடு கொஞ்சுவது, குழந்தைகளோடு விளையாடுவது போன்ற எதுவாகவும் இருக்கலாம்.தேங்காய் எண்ணெய்யில் இருப்பதுபோன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் கிரீன் டீயிலும் இருக்கிறது. கிரீன் டீயை மிதமான சூட்டில் தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். கிரீன் டீயை குடிக்கத்தானே சொல்வார்கள்… தலையிலும் தேய்க்கச் சொல்கிறீர்களே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. குடிக்கவும் செய்யலாம். தேய்க்கவும் செய்யலாம். இரண்டுமே முடிக்கு நல்லது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ,பீட்டா கரோட்டின் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதுவும் முடிக்கு ஏற்றது.

முடி கொட்டுவதற்கு 10விதமான காரணங்கள்
1.உடல் நல கோளாறு மற்றும் மனஅழுத்தம், 2.புரத உணவுச் சத்து பற்றாக்குறை, 3.பரம்பரை ரீதியான மரபணு காரணங்கள், 4.ரத்தசோகை, 5.முதுமை, 6.ஹார்மோன் பாதிப்புகள், 7.நாள்பட்ட நோய்கள், 8.வைட்டமின் மற்றும் போலிக் அமிலச் சத்து குறைபாடு, 9.தைராய்டு நோய், 10.முடியை ஸ்டைல் பண்ணுவதாக கருதிக்கொண்டு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவது.

கட்டுரையாளர்:
கலைமாமணி
மேத்தா ஹாஸ்பிடல். சென்னை. 9841062380

படிக்க வேண்டும்

spot_img