ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சாய்சிட்டியின் “SASTRA 4” உலகளாவிய மானியத் திட்டத்தின் கீழ், சஹாய் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெற அனுமதிக்கப்பட்ட முதல் இரண்டு பயனாளிகளுக்கான பரிசோதனை செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.
இதையொட்டி சாய்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரொட்டேரியன் டாக்டர் ஆர். பாலமுருகன், செயலாளர் ரொட்டேரியன் பாலாஜி ஜே, SASTRA திட்டத் தலைவர் ரொட்டேரியன் கோபிநாத், ரொட்டேரியன் அனந்தகிருஷ்ணன் மற்றும் ரொட்டேரியன் ரவிச்சந்திரன் ஆகியோர் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் சஹாய் மருத்துவமனைக்குச் சென்று பயனாளிகளைச் சந்தித்தனர்.
அவர்களுடன் சஹாய் மருத்துவமனையின் தலைமை இயன்முறை மருத்துவரும் பிரிவுத் தலைவருமான கஜேந்திரன், இளநிலை இயன்முறை மருத்துவரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆஷிக் ரிஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய பயனாளிகளின் உடல்நிலை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முன்னேற்றத்தை முறையாகப் பதிவு செய்து தொடர்ந்து கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட புதிய ஆவணப் படிவத்தை திட்டத் தலைவர் கோபிநாத் அறிமுகப்படுத்தினார். மேலும், திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறும் பயனாளிகளுக்குப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையும் அவர் விளக்கினார்.
தொடர்ந்து, தலைவர் டாக்டர் ஆர்.பாலமுருகன் இரு பயனாளிகளுடனும் கலந்துரையாடி, மறுவாழ்வு சிகிச்சையை நம்பிக்கையுடனும் மனஉறுதியுடனும் எதிர்கொள்ள ஊக்கமளித்தார். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவியும் ஆதரவும் ஷிகிஷிஜிஸிகி 4 திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் கட்டப் பரிசோதனையில், ஹரிஹரனை தலைவர் டாக்டர் ஆர். பாலமுருகனும், சுதாகரை செயலாளர் பாலாஜி ஜே-வும் புதிய ஆவணப் படிவத்தைப் பயன்படுத்தி பரிசோதித்து விவரங்களைப் பதிவு செய்தனர்.
SASTRA 4 திட்டத்தின் முதல் இரண்டு பயனாளிகள் தங்களது மறுவாழ்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ள இந்த நிகழ்வு, சாய்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் சஹாய் மருத்துவமனை இணைந்து மேற்கொள்ளும் சேவைத் திட்டத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.



