Homeபிற செய்திகள்எய்ட்ஸ் விழிப்புணர்வு 3.0: இந்தியாவில் எச்.ஐ.வி.யுடன் வாழும் 25.61 லட்சம் பேர்

எய்ட்ஸ் விழிப்புணர்வு 3.0: இந்தியாவில் எச்.ஐ.வி.யுடன் வாழும் 25.61 லட்சம் பேர்

எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய தொற்றுகளைத் தடுக்கவும், எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தவிர்க்கவும் ‘எய்ட்ஸ் விழிப்புணர்வு 3.0’ பிரசாரம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது.
ஈரோட்டில் கலெக்டர் கந்தசாமி விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள இந்தியா எச்.ஐ.வி. மதிப்பீடு 2025 அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 25.61 லட்சம் பேர் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 15 முதல் 49 வயதுக்குட்பட்டோரிடையே எச்.ஐ.வி. பாதிப்பு விகிதம் 0.20 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் புதிய எச்.ஐ.வி. தொற்றுகளும், எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்துள்ளன. 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2024-ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி. தொற்றுகள் சுமார் 49 சதவீதமும், எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகள் 81 சதவீதமும் குறைந்துள்ளதாக NACO தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2025-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் தொடர்பான உயிரிழப்புகளை 80 சதவீதம் குறைக்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
எனினும், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளை 80 சதவீதம் குறைக்கும் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. எனவே, எச்.ஐ.வி. பரிசோதனை, ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களிடையே எச்.ஐ.வி. பாதிப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படுகிறது. மிசோரம் மற்றும் நாகாலாந்தில் வயது வந்தோருக்கான எச்.ஐ.வி. பாதிப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. மணிப்பூரிலும் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தேசிய சராசரியைவிட அதிகமான பாதிப்பு காணப்படுகிறது.
எச்.ஐ.வி. தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வுடன், எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்
களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு எதிரான தவறான புரிதல்களை அகற்றுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img