கோவை மாவட்ட போலீசார் சார்பில் போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்“ மாரத்தான் நிகழ்ச்சியில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவை மாவட்ட போலீசார் சார்பில் “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தான் இன்று காலை நடைபெற்றது.

பொதுமக்கள் இடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இம்மா ரத்தான் கோவை மதுக்கரை – மாதம்பட்டி மேற்கு புறவழிச் சாலையில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்நிகழ்வை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மற்றும் ஐஜி ரம்யா பாரதி, எஸ்பி., பவன்குமார் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாரத்தான் ஓட்டத்தின் தொடக்கமாக, போதைப்பொருள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

“ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப் பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த மாரத்தானில், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.
“ஒரு முடிவின் தொடக்கம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வு, கோவை மக்கள் இடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.



