கோவை, அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் பழமை வாய்ந்த பள்ளிக்கூடம் ஆகும்.இந்த பள்ளியில் கடந்த 2001 -ம் ஆண்டு படித்து முடித்த மாணவ, மாணவிகள் 120 பேர் சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (18ம் தேதி) நடந்தது.காலையில் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம், கேன்டின், நூலகம், உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் பள்ளி கட்டிடத்தின் முன் நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். மாலையில் அனைத்து மாணவ மாணவிகளும் ஒன்று சந்திக்கும் நிகழ்ச்சி கோவை அருகே உள்ள ஆலந்துறை “மாங்கோ ரிசார்ட்டில் “ நடந்தது. அவர்கள் பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சிகள், தற்போது வாழும் வாழ்க்கை போன்றவற்றை பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் தங்களுக்குரிய திறமைகளை மேடையில் வெளிப்படுத்தினார்கள். சில மாணவர்கள் மலரும் நினைவுகளை பகிரும் போது கண் கலங்க பேசினார்கள். முன்னாள் மாணவர் கே.பிரவின் சினிமா பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். பள்ளியில் படித்தபோது அணிகள் பிரித்து செயல்பட்டது போல ஒவ்வொரு அணிகள் அமைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்கள்.
இதையடுத்து அனைவரும் ஒன்று கூடி உணவு உண்டு மகிழ்ந்தனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த பழைய மாணவர்களில் தற்போது தொழிலதிபர்களாகவும், டாக்டர்களாகவும் உலக அளவில் வங்கி மேலாளர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், தனியார் நிறுவன அதிகாரிகளாகவும் தேசிய விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்க வந்திருந்தனர்.



