ஈரோடு குமரன் சாலையில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில், மக்கள் தொகை டிஜிட்டல் சுய கணக்கெடுப்பு பணியை மாவட்ட கலெக்டர் கந்தசாமி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக ஜூலை 17 முதல் 31-ந் தேதி வரை 15 நாட்கள் பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலம் சுய பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜூலை 31க்குள் தங்கள் குடும்ப விவரங்களை இணையத்தில் பதிவு செய்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தானும் தனது செல்போன் மூலம் சுய பதிவை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக் கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை திட்டமிட உதவும் முக்கிய தேசியப் பணி என்பதால், ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.சுய பதிவின் போது மாநிலத்தைத் தேர்வு செய்து, கேப்சா மற்றும் ஓ டி பி சரிபார்ப்புக்குப் பிறகு, குடும்பத் தலைவர் விவரங்களுடன் மொத்தம் 33 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சரியாக பதிவு செய்யப்பட்ட பிறகு, தனித்துவமான ஐடி வழங்கப்படும்.
ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் கணக்கெடுப்பாளர்கள் வீடு தோறும் வந்து, பொதுமக்கள் பதிவு செய்த தகவல்களை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார்கள். அதன் பின்னர் 2027 பிப்ரவரி மாதத்தில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் மீண்டும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் 3,371 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் கண்காணிப் பாளர்களாக செயல்படுவார்கள். அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.



